|
| [ சனிக்கிழமை, 08 சனவரி 2011, 05:18.57 AM GMT +05:30 ] |
நீண்ட காலத்தின் பின்னர் 18 பெண்கள் உட்பட 336 தமிழ்ப் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்று களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் வைபவம் கோலாகலமாக இடம்பெற்றது. |
வைபவம் ஆரம்பமாவதற்கு முன்னர் பொலிஸ் வாத்தியக் குழுவினரின் பாண்ட் வாத்திய நிகழ்ச்சி இடம்பெற்றது. இங்கு பிரபல தமிழ் சினிமாப் பாடலான "நாளை நமதே....." என்ற பாடலும் இசைக்கப்பட்டது.
நாளை நமதே இந்த நாடும் நமதே ...." இந்தப் பாடலை களுத்துறைப் பொலிஸ் பயிற்சிக் கலாசாலையின் வாத்தியக் குழுவினர் இசைத்தபோது பயிற்சியை முடித்துக்கொண்ட 336 தமிழ்ப் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் புளங்காகிதமடைந்து காணப்பட்டனர்.
வடக்குக் கிழக்கிலிருந்து பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டோர் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் தெரிவித்தவை வருமாறு:
பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கிலிருந்து பொலிஸ் சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டு, அதிகளவானோர் ஒரே தடவையில் வெளியேறும் சந்தர்ப்பம் இதுவாகும்.
வடக்கு, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலம் முறைப்பாடு செய்யமுடியாமை உட்பட மொழிரீதியான சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டே அப்பிரதேசங்களிலிருந்து தமிழ்மொழி பேசும் 18 பெண்கள் உட்பட 336 பேர் பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
எதிர்காலத்தில் மேலும் பலர் இணைத்துக் கொள்ளப்படுவர். தாய்நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்பிவைத்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். |
No comments:
Post a Comment