Sunday, February 06, 2011

சிறீலங்காவின் 63வது சுதந்திரதினத்தினைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டங்கள்


 சிறீலங்காவின் 63வது சுதந்திர தினத்தைப் புறக்கணித்தும், தமிழ் மக்களிற்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையிலும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 4ஆம் நாள் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.








பல ஆண்டு காலமாக  எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளையும், 2009ஆம் ஆண்டு மே மாதம்வரை  கைது செய்யப்பட்ட, மற்றும் சரணடைந்த இளைஞர், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் விபரங்களை சர்வதேச அமைப்புக்களுக்கு  வெளியிடுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்கள் இந்த கவனயீர்ப்பின்போது வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையொப்பம் சேகரித்து  ஜக்கிய நாடுகள் சபையில் கையளிப்பதற்கான இந்த கவனயீர்ப்பு போராட்டங்கள் பிற்பகல் 3:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை லண்டனின் முக்கிய தொடரூந்து நிலையங்களான Kings cross, Liverpool street, Victoria, Waterloo, Paddington  ஆகிய தொடரூந்து நிலையங்களிலும் Oxford circus தொடரூந்து  நிலையத்தின் அண்மித்த Oxford street வீதியிலும் மேற்கொள்ளப்பட்டன.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தைகள், தாய்மார்கள், சிறுவர்கள், பெரியோர்கள் என அகவை வித்தியாசமின்றி தமிழ மக்கள், இன அழிப்பு தொடர்பான பதாதைகளை தாங்கியவாறு உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிரித்தானிய பிரதமரின் இல்லத்தின் முன்பாக (No. 10 Downing Street) காவல்துறையினரது அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகையுடனான கவனயீர்ப்பு போராட்டமும் ஏக காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை கோரும் கையெழுத்துப் போராட்டமானது தொடர்ந்து நடத்தப்பட்டு அக்கையெழுத்துப் பிரதிகளை ஜக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் மனித உரிமை அமைப்புகள் என்பனவற்றிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இப்போராடத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உங்களின் ஆதரவை கேட்டு நிற்பதுடன், இப்போராட்டத்திற்கு தொண்டர்களாக செயற்பட விரும்புவோரை தொடர்பு கொள்ளுமாறும கேட்டுக்கொள்கின்றது.

சிறந்த நோக்கத்துடன் நடத்தப்படும் இப்போராட்டத்தினை வழிப்படுத்தி, அதரவு வழங்கி, இனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு உதவுமாறு ஊடகங்களை பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்ளுகின்றது.

No comments:

Post a Comment