
இப்புத்திஜீவிகள் அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இம்மாநாட்டிலேயே வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தமிழர்களுக்கு சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் மற்றும் சம பிரதிநிதித்துவம் ஆகியன இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும், இவ்விடயத்தில் இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் இலங்கை எதிர்கொண்ட பேரழிவுகள், போருக்கு பிந்திய தற்போதைய சூழலில் இலங்கை அடைய வேண்டிய தேசிய நலிணக்கம், அபிவிருத்தி ஆகியன பற்றி இங்கு விரிவாக பேசப்பட்டது.

Heritage Foundation ஐ சேர்ந்த பேராளர்களில் ஒருவரான Lisa Curtis பேசுகையில், மஹிந்த ராஜபக்ஸ அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று சொன்னார். இலங்கையில் பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியன ஏற்பட அமெரிக்கா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த Dan Camp பேசுகையில், முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலேயே அமெரிக்கா இலங்கைக்கு உதவி வருகின்றது என்று குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் ஆர்வலர்களில் ஒருவரான தமிழ் புத்திஜீவி காருண்யன் அருளானந்தம் பேசுகையில், மிக நீண்ட காலங்கள் அரசினால் அடக்கி ஒடுக்கி வருத்தப்பட்டமையாலேயே தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துக்கு தள்ளப்பட்டனர் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது என்றும் கூறினார்.
சர்வதேச நெருக்கடிகள் குழுவைச் சேர்ந்த Jennifer Leonard உரையாற்றுகையில், அரசமைப்பின் 18 ஆவது திருத்தச் ச்ட்டம் மூலம் கிடைக்கப் பெற்று இருக்கின்ற கூடுதல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகார பரவலாக்கல் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment