Saturday, July 30, 2011

தி.மு.கவுடன் கூட்டணியில்லை: நிரந்தரமாக விலகியதாக ராமதாஸ் அறிவிப்பு!

“வரும் உள்ளாட்சி தேர்தல் உட்பட இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், பா.ம.க., தலைமையில் மாற்று அணி அமைத்து போட்டியிடுவோம்; திராவிடக் கட்சிகளுக்கு இதில் இடமில்லை,” என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். பா.ம.க.,வின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கட்சியின் தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் அன்புமணி, வேலு, ஏ.கே.மூர்த்தி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தல் உட்பட இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க., தலைமையில் மாற்று அணி அமைத்து போட்டியிடுவோம். எங்கள் அணியில் திராவிடக் கட்சிகளுக்கு இடமில்லை.

கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போதே, இம்முடிவு குறித்து கட்சியின் முக்கியமானவர்களுடன் பேசினோம். ஆனால், தற்போது காலம் கடந்து இம்முடிவை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட, சுயமரியாதை அதிகம் உள்ள கட்சி பா.ம.க., தான். தமிழக மக்கள் மண்ணை, மொழியை, வாழ்வுரிமையை, பண்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை தடுக்கப்பட, பா.ம.க.,வினர் இனி கடுமையாக உழைப்பர்.

‘டிவி’ சேனல்கள் நமது பண்பாட்டை முழுவதுமாக சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பேன்.

நாணயத்தின் இரு பக்கத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இவைகளால் மக்களுக்கு நன்மையும் கிடையாது; சமுதாயத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை.

தமிழக மக்கள் இலவசம் கேட்கவில்லை. தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பதவியில் அமர்ந்து ஆதாயம் பார்க்க, மக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இலவசங்களை தருகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் இது குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. தமிழக மக்கள் நலம் காக்க பா.ம.க., போராடும்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஒவ்வொரு கிராமத்திலும் 25 இளைஞர்கள் என்னுடன் வந்தால் போதும், தமிழகத்தை வளப்படுத்தி விடுவோம். வரும் 2016ம் ஆண்டு, தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி அமைக்கும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., தலைமையில் மாற்று அணியை உருவாக்கி, தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம்.

வரும் உள்ளாட்சி தேர்தலிலும், அதன் பிறகு வரும் அனைத்து தேர்தல்களிலும் பா.ம.க., தலைமையில் மாற்று அணி அமைத்து போட்டியிடுவோம்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்தை முறியடிக்க, தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் முழுமையான மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைக்க, பொது ஓட்டெடுப்பு நடத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment