Wednesday, July 27, 2011

இலங்கைப் போர்க் குற்றங்கள்: மகிந்தவை கைதுசெய்யக் கோரி ஆந்திரவில் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், அதற்குத் துணைபோன ஏனையவர்களையும் கைது செய்யுமாறு கோரி தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெருந்தொகையான பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டிருந்தார்கள்.

இலங்கையின் ஆடிக்கலவரம் இடம்பெற்ற கறுப்பு ஜுலையை முன்னிட்டு போர்க் குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிரான இயக்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தமிழர்களுக்கு நீதிவழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கர்னாடக மாநிலத்திலும், ஆந்திராவிலும் தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

No comments:

Post a Comment