சிறீலங்கா
சிங்கள இனவெறி அரசின் தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை வெளிப்படுத்தும்முகமாக
தங்கள் தொலைக்காட்சியில் “சிறீலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பில்
ஒளிபரப்பிய காட்சிகளின்மூலம் மானிடத்திற்கு எதிரான குற்றங்களை உலகிற்கு
வெளிப்படுத்தி ஊடகதர்மத்தை உறுதிசெய்த உங்கள் துணிகரமான செயலிற்கும்,
ஊடகவியலாளர் திரு.யோனத்தன் மில்லர் அவர்கட்கும் முதலில் எமது நன்றியையும்
பாராட்டையும் தெருவித்துக்கொளகிறோம் என ஜேர்மனியைத் தளமாகக் கொண்டியங்கும்
"தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு" அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
இலங்கை
சுதந்திரமடைந்த (1948) காலம்தொட்டு சிறீலங்காவில் தமிழ்மக்கள் மீதான
இனவழிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வந்தபோது தமிழ்மக்கள் அதற்கெதிராக
ஜனநாயக வழியில் அகிம்சைப் போராட்டங்களையும், பின்பு ஆயுதப்போராட்டத்தையும்
நடாத்தியபோதும் உலகம் எதையும் கண்டுகொள்ளவில்லை.
2009ம்
ஆண்டு தொடக்கத்திலிருந்து தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு யுத்தம் மிக
உச்சகட்டத்தை அடைந்து நாளுக்குநாள் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டுக் கொண்டிருந்தவேளையில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரவர்
வாழும் நாடுகளில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும்,
கண்டனப்பேரணிகளையும் நடாத்தி தமிழினத்தின்மீது சிங்கள ஆட்சியாளர்களால்
நடாத்தப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்துமாறு உலகநாடுகளை வேண்டி
நின்றனர். அந்தவேளையில் எந்த ஒரு நாடோ அன்றி எந்த ஒரு ஊடகமோ தழிழர்களின்
அந்த ஜனநாயக ரீதியான போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை என்பது மிக
வேதனைக்குரியதாகும்.
இறுதியில் 146,000 ற்கும்
அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்பும்கூட உலகநாடுகள் பெரிதாக
அக்கறை கொள்ளவில்லையே என்று தமிழ்மக்கள் மிக வேதனைப்பட்டுக்
கொண்டிருந்தவேனையில் தங்களால் ஒளிபரப்பு செய்யப்பட்ட “சிறிலங்காவின்
கொலைக்களம்” காட்சியும் மற்றும்பல காட்சிகளும் உலகநாடுகளின் கண்களைத்
திறந்து வைத்துள்ளதோடு தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையில் அக்கறைகொள்ளவும்
செய்துள்ளது என்பது தங்கள் தொலைக்காட்சி சேவைக்கு கிடைத்த வெற்றி
என்பதோடு, துயரில் மூழ்கியிருந்த தமிழர்களுக்கும் ஓரளவு நினமதியைத்
தந்துள்ளது.
தமிழ்மக்களின் விடுதலைப்போராட்ட
வரலாற்றில் சனல்-4 தொலைக்காட்சியினதும், ஊடகவியலாளர் திரு.யோனத்தன் மில்லர்
அவர்களினதும் பங்கு என்றென்றும் அழியா இடம்பெறும் என்பது உறுதி.
உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் சார்பில் எமது நன்றியையும், பாராட்டையும்
தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும்வரை தங்கள் தொலைக்காட்சியானது
ஊடக தர்மத்தின் வழிநின்று தனது கடமையை செய்யுமென நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment