Sunday, August 21, 2011

கேபியை வைத்து இந்தியாவை மிரட்டும் இலங்கை! அதிர்ச்சி ஆதாரங்களை அடுக்கும் சி.பி.ஐ

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் பல அதிர்ச்சி கலந்த திடுக்கிடும் தகவல்களைச் சொல்கிறார் ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சி.பி.ஐ அதிகாரியாகச் செயற்பட்ட மோகன்ராஜ்.
இவர் ஒரு பழுத்த காங்கிரஸ் தலைவரின் மகனாவார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடந்த நேரத்தில் கூட பல்வேறு தகவல்களை வெளியிட்டு அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்ட நேர்மையான அதிகாரியாகப் பார்க்கப்படும் இவர் குறித்த கொலை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட விடயங்களை குமுதம் இதழுக்கு தெரிவிக்கிறார்.




அந்த நேர்காணலில் அவர் முக்கியமாக கூறிய விடயங்கள் வருமாறு,
ராஜீவ் கொலை வழக்கில் தலைமை சி.பி.ஐ அதிகாரியாகச் செயற்பட்ட கார்த்திகேயன் அடிப்படையில் ஒரு பொலிஸ் அதிகாரியாக இருக்கவில்லை. அரசியல்வாதிகளின் துணையுடன் காவல்துறையில் சங்கமித்தவரே இந்த கார்த்திகேயன்.
கர்நாடகாவில் உள்ள மார்க்கரெட் அல்வா என்கிற காங்கிரஸ் காரருக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாம்.
ராஜீவ் வழக்கு விசாரணை முடிந்தது என்று கார்த்திகேயன் அறிவித்த உடன் அவருக்கு கர்நாடகாவில் தடல் புடல் விருந்தும் அளிக்கப்பட்டதாம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அடுத்து முக்கியமாக நியமிக்கப்பட்ட தீர்மானம் எடுக்கும் அதிகாரி இந்திராகாந்தியின் இறப்புக்குப் பின்னர் சீக்கியர்கள் கொல்லப்படும் போது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தவராம்.
அடுத்து முக்கியமாக ராஜீவ் கொலைவழக்கு சம்பந்தமாக பொதுமக்களிடம் தகவல்களைப் பெறுவதற்கு விசேட தொலைபேசி இணைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.
அதற்கு பொறுப்பாக பொதுமக்களிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு நியமிக்கப்பட்டவர். தமிழ்மொழி தெரியாத ஒரு தெலுங்கர். ஆனால் தகவல்களைச் சொல்பவர்கள் தமிழகத்தில் உள்ள தமிழர்கள்.
இங்கு நடந்த பல தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துகிறார் மோகன் ராஜ்.
காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் ராஜீவ் விசாரணை மீது உண்மையான அக்கறை இருக்கவில்லை என்று ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார்.
ராஜீவ் கொலையில் அன்று ஆட்சியில் இருந்த அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார்.
ராஜீவ் காந்தி கொலையில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்ட கேபிக்கும் இந்திய அரசியல்வாதி ஒருவருக்கும் இடையில் பணம் புகுந்து விளையாடியதாகவும் இன்று கே.பியை வைத்து இலங்கை இந்தியாவை மிரட்டுவதாகவும் கூறுகிறார் மோகன்ராஜ்.
ராஜீவ் கொலை விசாரணை ஒழுங்காக நடந்திருந்தால் இன்று இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

No comments:

Post a Comment