Saturday, August 13, 2011

பிளாட்பாரத்தில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி


பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பீச் ரோட்டிலுள்ள தீயைணப்புத்துறை அலுவலகத்திற்கு எதிரில், பிச்சைக்காரர்கள் படுத்திருக்கும் பிளாட்பாரத்தில், டீசன்ட்டாக, ஆங்கிலத்தில் பேசும் ஒருவர், கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார்.



இவரை பற்றி விசாரித்தபோது, பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பது தெரிய வந்தது. பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர், கல்கத்தாவைச் சேர்ந்த சக்கரவர்த்தி.

ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான பின், ஐதராபாத்திலுள்ள போலீஸ் அகடமியில் பயிற்சி முடித்தவர். பயிற்சிக்குப் பின், கடந்த 1983ம் ஆண்டு புதுச்சேரி போலீசில் பணியாற்றினார். பின், அருணாச்சல பிரதேசத்திற்கு மாற்றலாகி சென்று விட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த 1989ம் ஆண்டு பணியை ராஜினாமா செய்தார். போதை பழக்கத்திற்கு அடிமையான அவர், 5 நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

சக்கரவர்த்தி ஏற்கனவே புதுச்சேரி போலீசில் பணியாற்றியிருந்ததால், அவரை அடையாளம் கண்டு கொண்ட போலீசார் சிலர், போலீஸ் தலைமையகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக அவர் படுத்திருக்கும் இடத்திலேயே, போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சக்கரவர்த்தியின் தாயார் அர்ச்சனா, அவரை பல இடங்களில் தேடிவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன், புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள லாட்ஜில் தங்கி, தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார்.

பிளாட்பாரத்தில் சக்கரவர்த்தி படுத்திருக்கும் தகவல் தெரிந்தது. நேற்று காலை, அர்ச்சனா, மகன் இருந்த பிளாட்பாரத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு அவரை காணவில்லை.

அவருடன் படுத்திருந்த மற்ற பிச்சைக்காரர்களிடம் போலீஸ் துணையுடன் விசாரித்த போது, அவர் எங்கேயாவது சுற்றிவிட்டு இரவு நேரத்தில் வந்து படுத்துவிடுவார் என்று தெரிவித்தனர்.

இதுபற்றி, வடக்கு எஸ்.பி.,சிவதாசனிடம் கேட்டபோது "பணியிலிருந்து ஓய்வு பெற்ற சக்கரவர்த்தியிடம் போலீஸ் தரப்பில் பேசி பார்த்த போது, அவர் தனது சொந்த ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். தொடர்ந்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவரது தாயாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment