யூலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது
இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினை இயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினை
இயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்தியுள்ளார் என்றும், எமது தமிழீழ மக்களின் துயரம் படிந்த வாழ்வினை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கினை,புகழேந்தி அவர்கள் திரைப்படைப்பின் ஊடாக வெளிக்கொணர முயற்சி எடுத்தவேளையிலேயே, அவரது பணிக்கு உரம் ஊட்டும் வகையில், Global Media Invest Asஅவருடன் களமிறங்கியது” என்றும் குறிப்பிட்டார்.
இத் திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி. தங்கராஜ் அவர்களின் உரை ,உணர்வுபூர்வமாக அமைந்ததை, பார்வையாளர்கள் வெளிப்படுத்திய கரகோஷங்கள் புலப்படுத்தின.
மரணங்களைக் கடந்த நீண்ட பயணத்தில், பெரும் வலி சுமந்து செல்லும் ஈழ மக்கள் எதிர்கொண்ட அவலத்தின் சில பக்கங்களை, இத்திரைப்படத்தின் ஊடாக, உலகின் முன் சாட்சியப்படுத்த தான் முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். தமிழீழ மக்களின் துயர் நிறைந்த வாழ்வுச் சூழலையும், போராட்டத்தின் நிஜமான வரலாற்றினையும் ஆழமாகப் புரிந்து கொண்டவர் என்பதனை புகழேந்தி அவர்களின் நீண்ட உரை வெளிப்படுத்தியிருந்தது.
இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், ‘தென் தமிழீழத்தில் ஒரு சிறுமிக்கு நடந்த இந்த பாலியல் வன்கொடுமை, பேரவலத்தின் ஒரு சிறு குறியீடாகப் பார்க்க வேண்டுமெனவும், இத் திரைப்படத்தில் தான் நடித்ததையிட்டு பெருமையடைவதாகக் கூறினார். அத்தோடு உலகின் 194 வது நாடாக தமிழீழம் என்கிற தேசம் உதயமாகும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் டி. இமான் அவர்கள் உரை நிகழ்த்துகையில் ,’இத் திரைப்படம் தொடர்பாக திரு.புகழேந்தி அவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு,திரைக்கதையை விபரிக்கும்போது , தான் கண்ணீர் சிந்தியதாகவும், அத்தோடு முதல் முதலாக ‘உணர்ச்சிக் கவி ‘ காசி ஆனந்தன் அவர்களோடு இப்படத்தில் பணியாற்றியதை,வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இத்திரைப்படத்தில், உணர்ச்சி கவிஞர் வரிகளில் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மற்றும் ‘இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ’ என இருப்பாடல்களும், கவிஞர் கதிர்மொழியின் வரிகளில்‘சுட்டிப் பெண்ணே சுட்டிப் பெண்ணே’, , மற்றும் ‘ஏனோ ஏனோ’ என நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசை வெளியீட்டிற்கு வந்திருந்த மக்கள் அனைவரும் பாடல்களின் இசையாலும் கவித்துமான வரிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர்.
‘இருப்பாய் தமிழா..’என்கிற பாடல் இருதடவைகள் ஒலி பரப்பப்பட்ட போது, முழு அரங்கமும் உணர்வுப் பிழம்பாகக் காட்சியளித்ததை காணக்கூடியதாக இருந்தது.
No comments:
Post a Comment