Saturday, August 13, 2011

அனைத்துலக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் - சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக தரம் வாய்ந்த, நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், சிறிலங்கா அனைத்துலக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
நியுயோர்க்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். 

சிறிலங்காவில் அனைத்துலக மனிதஉரிமைச் சட்டங்களும், மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகம் வாய்ந்த சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதற்கே அமெரிக்கா ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அனைத்துலக தரத்திலான விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது அனைத்துலக தரத்துக்கேற்க இருக்க வேண்டியது சிறிலங்காவின் பொறுப்பு என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக இதைச் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட விக்ரோரியா நுலன்ட் அம்மையார், சிறிலங்கா அதைச் செய்யும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா நம்பகமான, சுதந்திரமாக அனைத்துலக தரம் வாய்ந்த விசாரணைகளை நடத்தத் தவறினால், அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment