கஜனி
முகமதுவா அதுவும் லண்டன் மீது படையெடுத்தாரா ? எப்போது என்று
ஆச்சரியப்படவேண்டாம் மக்களே ! "கடந்த 3 நாட்களாக லண்டனில் சைவத்
திருத்தலங்கள் உடைக்கப்படும் அபாயம்" "மக்களே விரைந்து செயல்படுங்கள்"
"மக்களே நிதி உதவி செய்யுங்கள்" என்று பல மின்னஞ்சல்கள் உலாவருகின்றன.
சைவப் பற்றுள்ள மற்றும் ஆன்மீகவாதிகள் கொதித்துப்போய் யார் திருத்தலங்களை
இடிக்கப்பார்க்கிறார்கள் என்று பொங்கி எழ ஒருபக்கத்தால உண்டியலும் நிரம்பி
வழிய ஆரம்பிக்கிறது. நடந்தது என்ன என்று தெரியாத மக்கள் கோயிலை
இடிக்கப்போகினமாம் என்று கவலையடைந்துள்ளனர். நிலைமை என்ன என்று
தெரியவேண்டாமா ? எமது பார்வையை கொஞ்சம் அங்கே திருப்புவோமா ?லண்டன் முத்துமாரி அம்மன் ஆலயம் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஒரு கோயிலாகும். அதனை நடத்துபவர்கள் பற்றிக் கூறி நாம் தனி நபர் தாக்குதலை நடத்த விரும்பவில்லை. மாறாக அக்கோயிலுக்கு என்ன நடக்கிறது என்பதனை மட்டும் பார்ப்போம். அக்கோயில் இயங்கிவந்த கட்டிடம் லீசுக்கு (குத்தகைக்கு) எடுக்கப்பட்டதாகும். குறிப்பிட்ட ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் அதன் உரிமையாளர் நினைத்தால் மீண்டும் புதுப்பிக்கலாம் இல்லையே கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்தவர் அதனை உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும் அது தான் முறை. மற்றும் சட்டமும் ஆகும். அதற்கு அமைவாக தற்போது குத்தகைக் காலம் முடிவடைய அதன் உரிமையாளர் அதனை ரெஸ்கோ(TESCO) நிறுவனத்துக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளார். அவ்வளவு தான்.
எனவே கோயிலை வேறு இடத்துக்கு மாற்றவேண்டியது தானே. இதனை ஒரு பூதாகரமான பிரச்சனை போலவும் ஏதோ கஜனி முகமது படைஎடுத்து வந்து இந்தியாவில் உள்ள கோயில்களை அழித்தது போல சைவத் திருத்தலங்களை லண்டனில் இடிக்கிறார்கள் என்று ஆலய நிர்வாகிகள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புவதும், மக்கள் உடனடியாக காசு தரவேண்டும் என்று கோருவதிலும் என்ன நியாயம் இருக்கிறது. சிலரை இவர்கள் 10,000 பவுன்ஸ் வரை தரவேண்டும் என்று கேட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் அதிர்வுக்குத் தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாளும் கோயில் இயங்கியபோது அதில் கிடைக்கப்பெற்ற வருமானம் எங்கே என்ற கேள்விகளும் எழுகின்றது. அதனை நாம் ஊருக்கு கஷ்டப்படும் மக்களுக்கு அனுப்பிவிட்டோம் என்கிறது ஆலய நிர்வாகம். ஆனால் அவ்வாறு சென்ற முழுக் காசுக்கும் கணக்கு காட்ட முடியுமா ? முடியவில்லையே ..
இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் பிரித்தானியாவுக்கான இலங்கைத் துணைத் தூதர் அம்சாவை எவரும் விட்டுவைப்பது இல்லை. ஒருவகையில் இந்த மனிசனும் பாவம் தான். ஏன் தெரியுமா அவர் தமிழர்களுக்கு 10 துரோகம் செய்தால் அதனை 20 ஆக எடுத்துக்காட்ட சிலர் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக மெளனமாக இருக்கும் அம்சாவையும் இப் பிரச்சனைக்குள் தூக்கிப்போட்டு உள்ளனர். அதாவது அம்சா சொல்லித் தான் உரிமையாளர் தனது கட்டிடத்தை ரெஸ்கோ சூப்பர் மார்க்கட் நிறுவனத்துக்கு கொடுத்தார் என்றும். இதன் பின்னணியில் சிங்களம் இருப்பதாகவும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளனர். இதனால் தமிழர்கள் ஆத்திமடைவார்கள் பணத்தை வாரி வாரி இறைப்பார்கள் என்பது நிர்வாகிகள் கணக்கு.
இதெல்லாம் போதாது என்று இலங்கைத் துணைத் தூதர் அம்சா லண்டனில் சைவக்கோயில்களை எல்லாம் இடிக்கிறார் என்று நக்கீரன் பரபரப்புச் செய்திவேறு வெளியிட்டுள்ளது. இதனைப் பார்க்கும் தமிழநாட்டவர்களையும் உசுப்பிவிடும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழர் தலையில் முழகாய் அரைப்பது என்று ஆகிவிட்டது. நான் நீ என முண்டியடிக்கும் ஆட்கள் தான் அதிகரித்துவிட்டார்கள். இதனை நாம் எழுதுவதால் "அதிர்வு அம்சாவுக்கு அடிபணிந்தது" என்று கட்டுரை வரலாம் ! இல்லை அதிர்வு சைவ சமயத்துக்கு எதிரான நாத்திகர்கள் என்றும் கட்டுரை வரலாம். அதற்காக நாம் உண்மையை எழுதாமல் இருக்க முடியுமா ?
No comments:
Post a Comment