ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடந்து வருவது அநேகர் அறிந்ததே.ஐ.நா. செயலாளர் நாயகம் திரு. பான் கி. மூனின் ஆணையின்பேரில் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திடம் மேல் நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பெற்றுள்ளது.
இதன்பாலான ஐ.நா.வின் முயற்சிகளை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ள அதேவேளையில் கடந்த சில தினங்களாக ஜெனீவாவிலும் கனடாவிலும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அண்மையில் கனடா பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்த இலங்கை தொடர்பான கொள்கை மாற்ற பேட்டியைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை கனடாவின் ஐ.நா. பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் கொண்டுவருவதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளனர். இத் தீர்மானப்படி,
'எதிர்வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் மனித உரிமைகள் ஆணையத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கையின் படித்த பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் வெளியிடவுள்ள அறிக்கையையும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை எடுத்துள்ள, எடுக்கவுள்ள செயல்பாடுகளையும் சர்வதேச நாடுகள், சுயாதீன ரீதியில் உத்தியோகபூர்வமாக சம்பாசிக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிப்பாடன இவ் நடவடிக்கை ஐ.நா. சபையின் சர்வதேச நிபுணர் குழுவால் தயாரிக்கப்பெற்ற இலங்கைப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான அறிக்கையை வலுப்படுத்தவதாக இருப்பதாகவும், ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையின் மூலமே இலங்கை அரசாங்கம் மறைத்து வரும் மனித உரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட்டு ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அமைதியைப் பேண உதவும் எனவும் கனடிய தமிழர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
மற்றும் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகரும், கனடா சட்டவியலாளர் உரிமைகள் காப்பு நிறுவனத்தின் உறுப்பினருமான திரு. கேரி ஆனந்தசங்கரி, ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் கருத்துத் தெரிவிக்கையில் கனடாவின் கொள்கை மாற்றத்தையும் , பிரதமர் திரு. ஸ்டீபன் ஹாப்பரின் வெளிப்பாடான கருத்துக்களையும் வரவேற்றுள்ளார்.
எனினும் புதன்கிழமை இலங்கை தொடர்பான தீர்மான முன்மொழியை கனடா உத்தியோகபூர்வமாக மனித உரிமைகள் ஆணையத்தின் 18வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவில்லை. கனடாவின் இத் திடீர் திருப்பம் பலரையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இது தற்காலிகமானதா அல்லது ஒரு சாணக்கியத்தனமான அரசியல் நகர்வா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்டுகிறது.
No comments:
Post a Comment