Wednesday, October 19, 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதலிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான திட்டமிட்ட தாக்குதலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டித்து அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.

  • அறிக்கை வருமாறு..

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

கடந்த 16 - 10 - 2011 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது பலாலி வீதியும் பழம் வீதியும் இணையும் சந்தியில் உள்ள முக்கிய இராணுவக் காவலரணில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திலேயே இடம் பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் எட்டுப் பேர் கொண்ட குழுவினர் தவபாலசிங்கம் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் குழாய்களால் தாக்கினர். தாக்குதல் காரணமாக தவபாலசிங்கத்தின் தலை மற்றும் உடலில் மோசமான காயங்கள் ஏற்பட்டது. தாக்குதலாளிகள் “உனக்கு தனிநாடா வேண்டும்” என்று கத்தியவாறே தாக்கியுள்ளனர்.

தவபாலசிங்கம் அவர்கள் கடந்த ஏப்பிரல் 2011 இல் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான தலைவராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவரது தெரிவு உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது. அந்த நிலையில் தவபாலசிங்கம் தலைமைப் பதவியை ஏற்கக் கூடாதென்றும் தானாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக தவபாலசிங்கம் அவர்களது தெரிவு 2011 செப்ரெம்பரில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தலைவராகப் பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக வன்முறையற்ற அமைதி வழிப்போராட்டங்களை முன்னெடுப்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். உதாரணமாக கிறீஸ்பூதம் என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை விடவும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

மேற்குறித்த செயற்பாடுகளுக்கு தவபாலசிங்கம் துணிச்சலுடன் தலைமை வகித்திருந்தார். தவபலசிங்கத்தின் இவ்வகையான துணிச்சலான தலைமைத்துவமானது அவர் முகம் கொடுத்துள்ள இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த கபடத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தத் தாக்குதல் என்பது வெறுமனே தவபாலசிங்கத்திற்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் எதிரானதல்ல அது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கும் எதிரானதாகவே கருதப்படல் வேண்டும். ஏனெனில் தவபாலசிங்கம் தலைமை வகித்த செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படை இருப்புக்கு அவசியமானவையாகும்.

இந்தத் தாக்குதல் சம்பவமானது நாகரீகம் அடைந்த ஓர் சமுதாயம் விரும்புகின்ற ஐனநாயக பண்புகளை கேலிக் கூத்தாக்குகின்ற வகையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற பாணி, நேரம், இடம் என்பவற்றை நோக்கும் போது இத்தாக்குதலானது சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவும் பங்களிப்பும் இன்றி ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது.http://eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/t-arikkai%20tamil%20theesi%20kuuddamippuz.jpg

செ.கஜேந்திரன்                                      
பொதுச் செயலாளர்

ஜீ.ஜீ.பொன்னம்பலம்
உபதலைவர்/வெளிவிவகாரக்
குழு இணைப்பாளர்

வி.மணிவண்ணன்
உபதலைவர்/இளைஞர்
விவகாரப்பிரிவு இணைப்பாளர்

No comments:

Post a Comment