
சனல் 4 ஊடகத்தின் புதிய காணொளி தொடர்பில் கூடிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொது மக்கள் தொடர்பு மற்றும் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட காணொளிகள் பொய் என நிரூபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிவந்த இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் 2 வது பாகத்தினை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் எனும் தலைப்பில் அதன் அடுத்த பாகத்திற்குரிய ஆவணப்படத்தினைத் தயாரிக்குமாறு சனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் சமகால விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் Dorothy Byrne, ITN தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்புதிய ஆவணப் படத்தில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு, போர்க் குற்றங்கள் பற்றி யாரெல்லாம் அறிந்திருந்தார்கள், போர்க் குற்றங்களைத் தடுக்க உலகம் ஏன் தவறியது என்பது குறித்தும் ஆராயப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் Jon Snow இனால் வழங்கப்படவுள்ள புதிய இலங்கையின் கொலைக்களம், தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் ஆவணப்படத்தில் போரின் இறுதி நாட்களில் என்ன நிகழ்ந்தது என்பதை வலுவான ஆதாரங்கள் நேரடிச் சாட்சியங்கள், காணொளி மற்றும் ஒளிப்படங்கள் மூலமாக ஆவணப்படத்தின் நெறியாளர் Callum Macrae யால் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment