Monday, November 14, 2011

ஊழல் பெருச்சாலிகள் போராட்டக்காரர்களை களங்கப்படுத்துவதா? வைகோ கேள்வி

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு, அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அணுமின் நிலையம் பாதுகாப்பு அற்றது, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தும், உடல் நலக் கேடுகள் வராமல் தடுப்பதற்கும், ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் உரிய நட்ட ஈடு வழங்குவதற்கும் தயாராக இல்லாத நிலையில், தங்களுக்குப் பேராபத்து ஏற்படும் என அஞ்சுகின்ற மக்களின் போராட்டம் சரியானது தான் என்று அணுசக்தியை ஆய்வு செய்யும் மேதைகளான சூரத் ராஜூ, எம்.வி.ரமணா ஆகியோர் கூறி உள்ளனர்.

இந்த அணுமின் நிலையத்தில் அமைக்கப்படுகின்ற ரியாக்டர்கள் பாதுகாப்பானவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் தரமுடியாது என்றும் கூறி உள்ளனர்.

இந்திய மின்துறையின் முன்னாள் செயலாளர் சர்மா, அப்துல் கலாம் கூறிய கருத்துகளுக்குக் கடுமையான மறுப்புத் தெரிவித்து, கூடங்குளம் அணுமின் நிலையம் முழுவதும் பாதுகாப்பானது என்பதை மறுத்து உள்ளார்.

இந்நிலையில் எழுபதுகளின் தொடக்கத்தில் இந்தியாவில் 43,500 மெகா வாட் அணுசக்தி மூலம் 2000ம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்தது.
ஆனால் இதுவரையிலும் 2720 மெகா வாட் மின்சாரம் மட்டுமே அணுசக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது இப்போதைய இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 2.8. விழுக்காடுதான் அணுமின் நிலையங்கள் மூலமாக உற்பத்தி ஆகின்றது.

இந்நிலையில் தங்கள் உயிர்களுக்கும், வருங்காலத் தலைமுறையினரின் உடல்நலனுக்கும் பேராபத்து நேரும் என்ற காரணத்தால் கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களை வருத்திக்கொண்டு போராடுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் தொடர்ந்து பட்டினிப்போரும் நடத்துகின்றார்கள்.

ஆனால் இந்தப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில், அதில் ஈடுபட்டு உள்ளவர்களைக் களங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி, பழிதூற்றும் எண்ணத்துடன், வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதல் என்று, அணுசக்தித்துறைத் தலைவர், ஒரு அக்கிரமமான குற்றச்சாட்டைச் சொன்னார்.
அது கிறித்துவ மிஷனரிகளின் பின்னணி என்று சிலர் நஞ்சைக் கக்கினார்கள். மத்திய அமைச்சர் நாராயணசாமி, போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது; அது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொள்ளை அடித்து, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்ததோடு, அதற்கு புரோக்கர் வேலை பார்த்த வின்சட்டாவையும் வெளிநாட்டுக்குத் தப்ப வைத்த ஊழல் பேர்வழிகள், பங்குச்சந்தை ஊழல், தற்போதைய இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்களின் மூலமாக உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் செய்த பேர்வழிகளாகப் பெயர் எடுத்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், நியாயமாகப் போராடுகின்ற மீனவ மக்களையும், தென் மாவட்ட மக்களையும், களங்கப்படுத்த முயல்கின்றனர். மக்கள் கோபத்தின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, போராட்டத்தை நசுக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகின்றது. இந்த முயற்சிகளுக்கு மாநில அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நாளும் தாக்கிக் கொல்லப்படும் பிரச்சினையிலும், ஈழத்தமிழர் பிரச்சினையிலும் தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்ற இந்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையிலும், அக்கிரமமான நடவடிக்கைகளில் ஈடுபடுமானால் மக்கள் போராட்டம் மேலும் ஓங்கி எழும்.
பொய் வழக்குப் போடுவதால், நச்சுப் பிரச்சாரம் செய்வதால், மக்கள் சக்தியை ஒடுக்க முடியாது என எச்சரிக்கின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment