ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டில் தனது பதவியை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சோதிடக் கணிப்பை வெளியிட்ட, இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பை இலங்கையில் பார்வையிட அரசாங்கம் தடை செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இரவு, 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர்.
குறிப்பாக இலங்கையைப் பற்றிக் கருத்து வெளியிட்ட ஒரு சோதிடர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2012ம் ஆண்டு இறுதிக்குள் தனது பதவியை விட்டு, அரசியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்தை நிகழ்வில் பங்கேற்ற ஏனைய சோதிடர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி இலங்கையில் டயலொக் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகியிருந்தது.
இந்நிகழ்ச்சி பற்றி கேள்வியுற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுச பல்பிட்டவை அழைத்து, கண்டித்துள்ளதுடன் மீ்ண்டும் இந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பாவதை தடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இலங்கையில் அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் இணைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment