Friday, January 06, 2012

சிறிலங்கா பொறுப்புக்கூறாது விட்டால் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க கனடா தீர்மானம்! கனேடிய ஊடகம்

 
மனிதவுரிமை விவகாரங்களுக்குரிய பொறுப்புக்கூறலில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்கத் தவறினால், 2013இல் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவுள்ள கூட்டத்தினைக் கனடா புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக கனேடிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற போது கனேடியப் பிரதமர் Stephen Harper இந்தக் காலக்கெடுவினை விதித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறப்படுவதோடு, தமிழ் மக்களுடனான மீள்நல்லிணக்கத்தை வலுப்படுத்துமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிபந்தனை விதித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பிலிருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம். நாட்டின் இன முரண்பாடு சார்ந்த, இடம்பெயர்ந்த மக்களின் நிலை சார்ந்த மற்றும் அரசியல் மீள் நல்லிணக்கம் சார்ந்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம் என ஒரு நேர்காணலில் Stephen Harper தெரிவித்துள்ளார்.

சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் உலகளாவிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கனடா முயல்கின்றது. பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு பெருமெண்ணிக்கையிலான நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

ஆனால் மனித உரிமை விவகாரங்களில் அனைத்து நாடுகளும் கனடாவைப் போன்ற அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை சார்ந்த அடிப்படை விழுமியங்கள் மீது மீள்கவனக்குவிப்பினையும் அவற்றில் மறு சீரமைப்புகளை ஊக்குவிக்கும் முனைப்பினைக் கனடா கொண்டுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் Stephen Harper தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க ஜனநாயக மற்றும் மனித உரிமை நியமங்களை மேம்படுத்துவதற்குரிய சிறந்த அனைத்துலக கட்டமைப்பாக பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு விளங்குவதாகவும் Stephen Harper கருதுகின்றார்.

பொதுநலவாய நாடுகளின் அடுத்த கூட்டத்தொடரினைக் சிறிலங்காவில்; நடாத்துவது என்ற முடிவு பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாயினும் தற்போதைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு உறுப்பு நாடுகள் தமது முடிவினை மீளாய்வு செய்ய வேண்டும்.

பொதுநலவாய நாடுகளுக்கான இரண்டாவது பெரிய உதவி வழங்கும் நாடு கனடாவாகும். இலங்கைத் தீவில் போர் முடிவடைந்த காலத்திலிருந்து இதுவரை 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கனடாவினால் வழங்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மனித உரிமை மீறல்கள் மீது தலையிடும் செயற்குழு கடந்த கூட்டத்தொடரில் நியமிக்கப்பட்டது. கனடா உட்பட்ட ஒன்பது நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இச்செயற்குழு நியமிக்கப்பட்டது.

பொதுநலவாய நாடுகளின் கூட்டங்களில் கடந்த காலங்களில் கொந்தளிப்பும், வியத்தகு நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. உறுப்பு நாடுகளில் உள்நாட்டு மட்டத்தில் ஆட்டங்காணச் செய்த நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன.

1971இல் உகண்டாவின் ஜனாதிபதி Milton Obote பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற போது, அவரது ஆட்சியை கவிழ்ப்பதற்கு இடி அமீனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

அதேபோல 1977இல் Seychelles தீவின் ஜனாதிபதி James Mancham கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பிரதமராக இருந்த France - Albert René இற்கு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

1960களில் தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சியதிகாரத்திற்கு எதிரான பொதுநலவாய கூட்டமைப்பின் ஆபிரிக்க - ஆசிய உறுப்பு நாடுகள் திரண்டிருந்தன. கானாவின் தலைவராகவிருந்த Kwame Nkrumah மற்றும் இந்தியாவின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஆகியோர் தென் ஆபிரிக்க நிறவெறி அதிகாரத்திற்கு எதிராக பொதுநலவாய நாடுகளை ஒருங்கிணைத்தனர்.

கனடாவும் தென் ஆபிரிக்காவை வெளிப்படையாக விமர்ச்சித்ததோடு, அதன் நிறவெறி அரசியலைக் கைவிடுமாறு கோரியிருந்தது. 1961இல் பொதுநலவாய நாடுகளிக் கூட்டமைப்பிலிருந்து தென் ஆபிரிக்கா வெளியேற்றப்பட்ட நிலை உருவானது.

2007இல் ஜனநாயகத்தையும் சட்ட ஒழுங்கினையும் நிலைநிறுத்துமாறு நிபந்தனை விதித்து பாகிஸ்தானுடைய உறுப்புரிமையை பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு இடைநிறுத்தியிருந்தது.

ஜெனரல் Pervez Musharrafஇன் அவசரகாலச் சட்ட அமுலாக்கத்தினைக் கண்டித்து உடனடியாக பாகிஸ்தானின் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டது.

அனைத்துலக மற்றும் தேசிய மட்டங்களில் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment