Tuesday, February 14, 2012

சவீந்திர சில்வா – ஐ.நாவின் ‘கறுப்புப் பட்டியலில்‘ஆணையாளர் நவநீதம்பிள்ளை தகவல் 14.2.12



சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவரும், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, அமைதிகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

இதுதொடர்பாக அவர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வெளியே வந்த ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின நியமனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “இது கவலைக்குரிய விடயம். பரிசீலனை விடயத்தில் ஐ.நா மிகவும் தெளிவான கொள்கையைக் கொண்டது.

இது எனது பணியகம் செய்யும் வேலையின் ஒரு பகுதியாக உள்ளது.

மனிதஉரிமை மீறல்களைப் புரிந்தவர்கள் என்று சந்தேகப்படும் தனிநபர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை நாங்கள் பேணி வருகிறோம்.

இந்த நபர் [மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா] தொடர்பாக, ஐ.நா பொதுச்செயலருக்கு கவலை தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து தொடர்பாக உடனடியாக கருத்து எதையும் வெளியிட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மறுத்துள்ளார்.

அத்துடன் நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி பணியகமும் இதுதொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ளது.

No comments:

Post a Comment