Monday, February 13, 2012

ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் தோழர்கள் இவருக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

தாழ்த்தப்பட்டவன் ஆயுதம் எடுத்தால் நக்ஸலைட். தமிழன் ஆயுதம் எடுத்தால் விடுதலை புலி. இன்று தேசிய அளவில் இப்படி பலரது எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை அறிமுகப்படுதிய இந்தியாவில் மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? என்று காந்தி ஆதரவாளர்கள் வக்கனையாக பேச தெரியும். அன்னா ஹசாரே உண்ணா விரதத்திற்கு கூட்டமாக சென்று ஆதரவு அளிக்க தெரியும். ஊடகத்தில் அகிம்சையை பற்றி பேச தெரியும். ஆனால், இவர்களுக்கு முன்பு பதினொரு வருடங்களாக தன் இளமையை தொலைத்து ஒரு பெண்மணி தன் மாநிலத்திற்காக போராடி வருகிறாள். அவளுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ யாருமில்லை. வருடத்துக்கு ஒரு முறை, ஷர்மிளா பத்து வருடம் உண்ணாவிரதம் முடித்துவிட்டார், பதினொரு வருடம் முடித்துவிட்டார் என்று செய்தி வெளியீடுவது சடங்காகவே இருக்கிறது. அவர் போராட்டத்திற்கு பெரிய முன்னேற்றமில்லை. 

மணிப்பூர். இந்தியாவின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஓரமான மாநிலம் மட்டுமல்ல. இந்திய அரசு ஓரம் கட்டிய மாநிலம். இயற்கை வளம். அழகான தேயிலை தோட்டம். வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. இப்படி பல வர்ணனை வார்த்தைகள் மணிப்பூரை சொல்கிறார்கள். ஆனால், அந்த மாநிலம் பிரிவினைவாதிகளிடமும், இந்திய இராணுவத்திடமும் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் மணிப்பூர் கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்கு தேவையான உணவு, பணம் வாங்கிவருகிறார்கள். அவர்களை பிடிக்க முடியாத இந்திய இராணுவம் உதவி செய்த மக்களை வன்கொடுமை செய்திருக்கிறது. உள்ளூர் காவல்துறையினரும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக நிற்கின்றனர்.
அப்பாவி மக்களை சுட்டு, அவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லி ஒவ்வொரு பிணத்தையும் இந்திய இராணுவம் கணக்கு சொல்லியது. பெண்களை கற்பழித்து, பிறகு தங்கள் தோட்டாக்கள் மூலம் பெண்ணுறுப்பை அழித்தனர். இந்திய சட்டமும் அதற்கு உதவியாகவே இருந்தது. தட்டிக் கேட்கவும் முடியாது. கேட்டாலும், தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவார்கள். கிட்டதட்ட, ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கும் மாநிலமாக மணிப்பூர் இன்று வரையும் இருந்து வருகிறது.

இந்திய இராணுவம் நடந்த பல தாக்குததில் ஒரு தாக்குதல் மலோம் கிராமத்தை அதிர வைத்தது. பஸ்க்காக காத்திருந்த பத்து கிராமத்தினரை பிரிவினைவாதிகள் என்று சொல்லி இந்திய இராணுவம் சுட்டு தள்ளியுள்ளது. இறந்த பத்து அப்பாவினர் குடும்பத்திற்கும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு நியாயம் கிடைக்க, இது போல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசு மணிப்பூரில் இருக்கும் இராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும். விராசனை இல்லாமல் கொல்லப்படுவதை திருத்த வேண்டும் என்று துடித்து எழுந்து தனி பெண்ணாக களத்தில் குதித்தார் ஐரோம் ஷர்மிளா.
 
மனித வெடி குண்டாக மாறவில்லை. துப்பாக்கி எடுத்து யாரையும் சுடவில்லை. தன் உடல் தான் ஆயுதம். காந்தி வழி தான் சிறந்த வழி. நவம்பர் 2, 2000 இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்க் கொண்டார். ’தற்கொலை முயற்சி’ என்று அவரை அரசு கைது செய்தது. காவலில் இருக்கும் போது இறந்து விடக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக உணவு குழாய் பொருத்தினர். 

தான் இறந்து போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது அவரும் ஏற்றுக் கொண்டார். இன்றளவும், உணவு, தண்ணீர் இல்லாமல் உணவு குழாய் மூலம் வாழ்ந்து வருகிறார். 

ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த பதினொரு ஆண்டுகள் பல முறை தற்கொலை முயற்சி (IPC 309) சட்டத்தில் கைது செய்து உள்ளது. ஆனால், இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற யோசித்ததுக் கூட இல்லை. காந்தி வழியில் நியாயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்துகிறார்.

பல மாதர் சங்கங்கள் ஷர்மிளா போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஷர்மிளா பெயர் பரிசிலனை செய்யப்பட்டது. மணிப்பூரின் ”இரும்பு பெண்மணி” என்று பலராலும் போன்றபடுகிறார். 

ஊடகங்கள் அண்ணா ஹசாரேவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐரோம் ஷர்மிளாவுக்கு கொடுக்கப்படவில்லை. ஹசாரே கேட்கும் லோக் பால் மசோதாவை விட ஷர்மிளாவின் கோரிக்கை மிகவும் மலிவானது. இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ஆனால், அதற்காக அவர் பதினொரு வருங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார். 

No comments:

Post a Comment