பூந்தமல்லி சிறப்பு முகாமில் கடந்த 3 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் திரு. ஜெயமோகன் என்பவர் தன்னை விடுவிக்கக்கோரி உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.தாயகத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட தமிழின அழிப்பு, மற்றும் தமிழ்ர் தாயக நில அபகரிப்பு யுத்தத்தின்போது தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக அகதியாக இந்தியா சென்றடைந்தார். அகதியாக தமிழ்நாட்டில் தங்கியிருந்த திரு.வீ.ஜெயமோகன் உட்பட 14 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இந்திய குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்ப முயன்றதான குற்றச்சாடின் பேரில் திடீரென கைது செய்து செங்கல்பட்டு முகாமிற்கு கொண்டுசென்றனர்.
செங்கல்பட்டு தடுப்பு முகாமில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட சி.பி.ஐ பின்னர் இவர்களை அங்கிருந்து பூந்தமல்லி சிறப்பு முகாமிற்கு மாற்றினர். வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்களை கைது செய்திருந்த போதிலும் இவர்கள் அனைவர்மேலும் "மருந்துகளை இந்தியாவிலிருந்து அனுப்ப முயன்றதான குற்றச்சாட்டே" சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் ஒரே குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட14 பேரில் 12 பேரை விடுதலை செய்துள்ளபோதும் ஜெயமோகன், கெங்காதரன் ஆகிய இருவரை மட்டும் இன்னும் விடுதலை செய்யாது நீதிக்குப் புறம்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதனாலேயே ஜெயமோகன் தம்மை விடுவிக்கக் கோரி உண்ணானிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். கடந்த முதலாம் திகதி (01.02.2012) முதல் 9 நாட்களாக தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த திரு.வீ.ஜெயமோகன் பத்தாவது நாளான நேற்று (10.02.2012) வெள்ளிக்கிழமை நண்பகல் உடல்னிலை பாதிக்கப்பட்ட நிலையில் பூந்தமல்லி சிறப்புமுகாமில் இருந்து K.M.C மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். இவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் தனது இந்த முடிவிற்கான காரணத்தை விளக்கமாக தனது கைப்பட கடிதமாக எழுதி பூந்தமல்லி சிறப்பு முகாம் அதிகாரிக்கும், வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் வழங்கியிருந்தார். ஆனால் அதற்கான எதுவித பதிலும் இல்லாத நிலையில் நேற்று முந்தினம் 08-02-2012 அன்று மீண்டும் தனது நிலைப்பாட்டை விபரமாக எழுதி பூந்தமல்லி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்ததோடு அதன் பிரதியை மனித உரிமை ஆணையம், U.N.H.C.R, தலைமைச்செயலகம், மறுவாழ்வுத்துறை ஆகியவற்றிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.
No comments:
Post a Comment