Wednesday, February 22, 2012

தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழருக்காக நீதிகேட்டு கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம்17வது நாளாகவும்  தொடர்கின்றது.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல்
தலைவர்களான திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். எனவே எம் உறவுகளுக்காக புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த வரலாற்றுக் கடமையில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் அதன்மூலம் உலகத்தமிழர் அனைவரினதும் ஒருமித்த குரல் ஒலிக்கட்டும் அது சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பி எமக்கான நீதியைப் பெற்றுத்தரட்டும் என்று நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொள்ளுபவர்கள் வேண்டி நிற்க்கின்றனர்.
நீங்கள் வாழுகின்ற நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதிநிதிகளோடு தொடர்பு கொண்டு அல்லது www.walk-for-justice.org என்ற  இணையத்தளம் ஊடாக இந்த அஞ்சல் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என  அறியத்தருகின்றனர். தயவுசெய்து காலம்தாழ்த்தாது கையொப்பமிட்டு ஐநாவிற்கு அனுப்பிவையுங்கள். இது எமது கடமை இதை நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் எமக்கான நீதியை நாமே கேட்போம் என்று அறைகூவல் விடுகின்றனர் நீதிக்கான நடைப்பயணத்தை மேற்கொள்ளும் உணர்வாளர்கள்.
யுத்தத்தால் அழிந்துபோன உயிர்களை தவிர அனைத்தையும் பெற்றுத்தருவேன் என்று மகிந்த ராஜபக்ச நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கூட்டம் கூட்டமாக எம் உறவுகளை கொன்றொழித்துவிட்டு கூரைத் தகடுகள் வழங்குகின்றார். நாம் கேட்பது எல்லாம் இது அல்ல. அழிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயமான தீர்வு என்பதனை உலகிற்கு உணர்த்துவோம் வாருங்கள் மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலுக்கு.

No comments:

Post a Comment