Friday, February 24, 2012

பின்தொடரும் பிரச்சினைகள்! ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை!! மூச்சுத் திணறும் இலங்கை!!!


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும்.

சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்கிறது.

எல்லா குழுக்கள், மற்றும் சமூகங்களிடையேயும் உண்மையான நல்லிணக்கம் அவசியம். அதை அடைவதற்கு கடந்தகால சம்பவங்கள் குறித்த நீதி விசாரணையும், பொறுப்புக் கூறுவதும் முக்கியம்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பல கேள்விகளை நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவில் புறக்கணித்திருப்பது வருத்தத்துக்குரியது.

ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்காப் படையினராலும் விடுதலைப் புலிகளாலும் இழைத்திருக்கக் கூடிய குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா நிபணர் குழு அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியன தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர், மற்றும் பொருத்தமான ஐ.நா அமைப்புகளுடன் இணங்கிச் செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் சிறிலங்காவை ஊக்குவிக்கும்.

அனைத்துலக சமூகத்தில் சிறிலங்கா ஒரு செயல்நிலையான நாடு, உண்மையான நல்லிணக்கத்தை நோக்கி- உறுதியான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை நடைமுறைபடுத்துவதற்கான அதன் திட்டத்தை உலகிற்கு காட்டுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது“ என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment