Monday, March 12, 2012

உலகப் பெண்கள் நாள் - 2012

உலகப் பெண்கள் நாள் - 2012

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/ஊ/அ/01/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,தமிழீழம்.
08/03/ 2012.          
அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே! இன்று உலகப் பெண்கள் நாள். உலகப்பரப்பெங்கும் பெண்களுக்கு எதிராக காலாதி காலமாக நடைபெற்றுவந்த அடக்குமுறைகளையும் அநீதிகளையும் இடித்துரைத்து பெண்களையும் சம அதிகாரத்துடன் நடத்துவதற்காக பாடுபட்ட காலத்தில் உருவானதே இந்த உலகப் பெண்கள் நாள். பல நாடுகளில்
பெண்கள் ஒப்பீட்டளவில் சமவுரிமையுடன் வாழ்ந்தாலுங்கூட இன்றும் பெருமளவான இடங்களில் மிகவும் கொடுமையான வாழ்வினையே எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக இலங்கைத்தீவில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் நடுவே எமது தமிழீழப் பெண்கள் படும் கொடுமைகளும் வேதனைகளும் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவுக்கு உள்ளன. எமது தமிழினம் விடுதலையை அமைதிவழியில் வேண்டிநின்ற 1950 காலப்பகுதிகளிலேயே அடக்குமுறையாளர்கள் தொடங்கிய தமிழினவழிப்பு நடவடிக்கைகள் எமது தமிழ்ப் பெண்கள் மீதுதான் ஏவப்பட்டன.

பெண்கள் மீது நடாத்தப்படும் வன்கொடுமையானது மிக இலகுவான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அடக்குமுறையாளர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால் அதன் விளைவு எமது தமிழீழ மண்ணில் எதிர்மறையாக அமைந்தது. அடக்குமுறைக்கெதிரான போராட்ட உணர்வை எமது மக்களிடத்தில் அதிகரிக்கச் செய்தது. எமது தேசியத் தலைவர் தனது போராட்ட உணர்வினை மிகவும் ஆழமாகத் தூண்டியது எமது பெண்கள் மீதான அடக்குமுறைகளின் வன்கொடுமையே எனக் குறிப்பிடுகின்றார்.
அதன் நீட்சிப்போக்கு எமது விடுதலைப் போராட்டத்தினைப் பலப்படுத்தியது. விடுதலை அமைப்பு தனது ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த காலப்பகுதியில் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பெண்கள் தமது தனித்துவத்தைப் பேணுவதற்குத் தடையற்ற நிலை இருந்ததோடு எந்தவிதமான அழுத்தங்களுமற்ற அமைதி வாழ்க்கையை வாழ்ந்தனர். அதே போன்று விடுதலை அமைப்பு மீதான எச்சரிக்கை உணர்வு ஏனைய பகுதிகளிலும் தமிழ்ப் பெண்கள் மீதான அடக்குமுறைகளைக் கணிசமான அளவு குறைத்திருந்தது.
ஆனால் இன்று நிலைமை மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. கொடூர யுத்த காலத்தில் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள் தமது குழந்தைகளுடன் பல்வேறுவகையான துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் எதிர்காலமே சூனியமாக வாழ்கின்றனர். இன்றும் பல்வேறு விதமாக தொடரும் எமது பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கெதிராக உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழ்ப்பெண்கள் அனைவரும் செயற்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எமது தாயகப் பெண்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டு தாயகத்தில் எமது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகளை பன்னாட்டுச் சமூகத்தின் முன் வெளிக்கொண்டுவர வேண்டும். பன்னாட்டுப் பெண்கள் அமைப்புக்களை உள்வாங்கி எமது தாயகப் பெண்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பையும்  அவர்களின் அவலங்களுக்கு நிரந்தரத் தீர்வையும் பெற்றெடுக்கப் பாடுபட வேண்டும்.
நீண்டுசெல்லும் எமது விடுதலைப் பயணத்தில் தமிழீழப் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் காத்திரமானதாகவும் உலகப் பெண்களுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கின்றது. எனவே இவ்வாறு செயற்பட்ட நாம் தற்போது இன்னும் வீச்சோடு செயற்பட்டு எமது தாயகப் பெண்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகளை நிறுத்தப் பாடுபடுவதோடு அவர்களின் வாழ்வாதார மேம்படுத்தலுக்காகவும் உழைப்போம் என இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மகளிர் பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

No comments:

Post a Comment