Friday, March 16, 2012

பிரபாகரன் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டனர்: சேனல் -4 விடியோ வெளியீடு





லண்டன் / கொழும்பு, மார்ச் 15: ""இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை அருகில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்றனர்'' என்கிற அதிர்ச்சிகரமான தகவலுடன் கூடிய ஆவணப்படத்தை பிரிட்டனின் சேனல் - 4 தொலைக்காட்சி வெளியிட்டது.  "இலங்கைக் கொலைக்களம் : தண்டிக்கப்படாத போர்குற்றங்கள்' என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரில் இலங்கை ராணுவத்தினர் கடுமையான போர்க்குற்றங்களைப்
புரிந்திருப்பதாகக் கூறுகிறது.  இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கருத்துகள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், புதிய விடியோ, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  தந்தை எங்கே? ""போரின் இறுதி கட்டத்தில் இலங்கை ராணுவத்திடம் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சரணடைந்தார். அவரைத் துன்புறுத்தி, பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று கேட்டு அறிந்து கொண்ட ராணுவத்தினர், பிறகு அவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இலங்கை அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை எங்களுக்குத் தெரிவித்தார்'' என்று இந்த ஆவணப்படம் குறித்து பிபிசியிடம் பேசிய சேனல்-4 செய்தித் தொடர்பாளர் கூறினார்.  தடயவியல் ஆதாரம்: போரின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் பாலசந்திரன் கொல்லப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் டெரிக் பெüன்டரின் கருத்தும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.  பாலசந்திரன் உடலின் உயர்தரமான புகைப்படங்களை சோதனை செய்த அவர், "அந்தச் சிறுவன் போரில் காயப்படவில்லை. அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் பாலசந்திரனை பாதுகாப்பாக இலங்கை ராணுவத்திடம் சரணடைவதற்காக அழைத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான தகவலும் விடியோவில் இடம்பெற்றிருக்கிறது.  ""பாலசந்திரனுக்கு அருகே 5 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் 5 பேரும் முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம். சுட்டுக் கொல்லப்படும்போது, பாலசந்திரனின் கண்கள் கட்டப்பட்டிருந்தனவா என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால், சில அடி தூரத்தில் நின்ற ஒருவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்'' என்று பெüன்டர் கூறுகிறார்.  "இது ஒரு கொலைதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை' என்று அவர் உறுதியாகத் தெரிவிக்கிறார்.  இரண்டாவது விடியோ: இலங்கை கொலைக்களங்கள் என்கிற பெயரிலான முதலாவது விடியோவை சேனல் - 4 தொலைக்காட்சி ஏற்கெனவே வெளியிட்டது. இளைஞர்கள் சிலரை நிர்வாணப்படுத்தி, கைகளைப் பின்புறம் கட்டி சுட்டுக் கொன்றது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த விடியோவின் இரண்டாவது பகுதியாக புதிய விடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.  ஜெனீவாவில் நெருக்கடி: ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் நிலையில், சேனல் -4 தொலைக்காட்சியின் புதிய விடியோவால் இலங்கைக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இலங்கை மறுப்பு: இதனிடையே, சேனல் - 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம், "அடிப்படை ஆதாரமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று இலங்கை தெரிவித்திருக்கிறது.  ""ஜெனீவா மாநாட்டில் இலங்கையை அவமதிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காவே சேனல்-4 தொலைக்காட்சி இந்த இரண்டாவது விடியோவை வெளியிட்டிருக்கிறது. காட்சிகளின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படாமலேயே விடியோ வெளியாகியிருக்கிறது' என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியிருக்கிறது.  ""இலங்கைக்கு எதிராகக் கூறப்படும் அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள்தான் இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்களைச் செய்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன'' எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.  பிரிட்டனில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள்தான் இலங்கை அரசை குறிவைத்து தாக்கி வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகமும் சேனல் - 4 விடியோவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
First Published : 16 Mar 2012 02:20:11 AM IST

Last Updated : 16 Mar 2012 03:22:45 AM IST

No comments:

Post a Comment