
ஐநா மனித
உரிமைக் கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க இராஐhங்க செயலக அதிகாரி மாரியா
ஒட்டேரோ(Maria Otero )மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான
நடவடிக்கை எடுக்குமென்று கடந்த மூன்று வருடமாகக் காத்திருந்ததாகச்
சொன்னார்.
இலங்கை
அரசின் அசமந்தப் போக்குத் தொடர்வதாகவும் பேசிய அவர் தமிழர் வாழ்வைச்
சீரழித்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்று அவற்றிற்கான பரிகாரம் அளிக்காமல்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தார்.
தனது
அதிருப்தியைத் தெரிவிக்கும் முகமாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மனித
உரிமைக் கவுன்சிலில் பிரேரணை கொடுவர இருக்கிறது. இலங்கைக்கு நெருக்குதல்
கொடுக்கக் கூடாது என்று சீன அரசு அமெரிக்காவுக்கும் பிரேரணைக்கு ஆதரவு
வழங்கவிருக்கும் மேற்கு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவைப்
போல் இலங்கைக்கான ஆதரவை வெளிப்படையாகக் கூறத் தயங்கிய இந்திய அரசு விதண்டா
வாதம் புரியத் தொடங்கியுள்ளது. இரு நாட்களுக்கு முன்பு மறைமுகமாக
இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில்
இந்தியா வாசித்தது.
அதில்
கூறப்பட்ட செய்தி என்னவென்றால் ஒரு நாட்டிற்கு எதிரான தீர்மானங்கள்
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யுமாம். அதாவது இலங்கைக்கு
எதிரான தீர்மானம் அது செய்ய உத்தேசித்திருக்கும் நல்லிணக்க
நடவடிக்கைகளுக்குத் தடங்கலை ஏற்படுத்துமாம்.
மூன்று
வருடம் காத்திருந்தது போதும் என்று பொறுமையிழந்த அமெரிக்காவும்
இங்கிலாந்தும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வருகின்றன. ஆனால்
இந்தியா மாத்திரம் இன்றும் பல வருடங்கள் காத்திருக்க தயாராம். ஏப்படியோ
இந்தியாவுக்கு அரசு மீது நம்பிக்கை இருக்கிறது.
அமெரிக்காவின்
பிரேரணைக்கு ஆதரவு அளிக்கும்படி குடும்ப முன்னேற்றக் கட்சித் தலைவர்
கருணாநிதி இந்திய அரசைப் பகிரங்கமாகக் கேட்டுள்ளார். அவர் முதலமைச்சராக
இருந்த காலத்தில் இந்திய அரசு இலங்கை அரசின் போர் நடவடிக்கைக்கு வழங்கிய
போர் உதவிக்கு அனுசரணை வழங்கினார். இன்றும் திமுக காங்கிரசுடன் கூட்டணி
வைத்திருக்கிறது.
இதற்காகவாவது
கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்திருக்க வேண்டும். ஒரு
வேளை கருணாநிதியின் கோரிக்கை அவருடைய உண்ணாவிரதம் போல் ஒரு வேடிக்கையான
நாடகமோ தெரியவில்லை.
முதல்வர்
ஜெயலலிதாகவும் கருணாநிதி எழுதும் கடிதங்களைப் போல் ஒன்றை அமெரிக்கப்
பிரேரணைக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டி இந்திய மத்திய அரசிற்கு
அனுப்பியுள்ளார். தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தான் மிகவும் இக்கட்டான
நிலையில் இருக்கிறது.
சோனியா
தாசர்களான ஞானசேகரன், வாசன், சிதம்பரம், நாச்சியப்பன் ஆகியோர் இக்கட்டான
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிச்
செல்வாக்கு செல்லாக் காசாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி கூட இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டைக்
கைவிடும்படி மத்திய அரசைக் கேட்டுள்ளது.
தமிழகக்
கட்சிகள் ஒட்டுமொத்தமாக விடுத்த மேற்கூறிய ரகக் கோரிக்கையை இந்திய மத்திய
அரசு நிராகரித்து விட்டது. இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையில் இந்தியா
செய்த பங்களிப்பு நிரூபணமாகி விட்டது. குற்றவாளியை மறைப்பதற்கு
முயற்சிக்கும் இந்தியாவும் சம பங்குக் குற்றவாளிதான் என்பது மறைக்க முடியாத
உண்மை.
ஈழத்
தமிழர்களுக்கும் உலகத் தமிழினத்திற்கும் பச்சைத் துரோகம் செய்யும் இந்திய
மத்திய அரசை மானமுள்ள தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஈழத்
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்தியா உதவும் என்று நம்பியிருக்கும்
இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இது சிறந்த பாடமாக அமையும்.
தமிழ்
நாட்டில் காங்கிரஸ் கட்சி மாத்திரமல்ல இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன்
கூட்டணி வைத்திருக்கும் எந்தவொரு தமிழ் நாட்டுக் கட்சியும் தமது எதிர்காலம்
பற்றி சிந்திக்க வேண்டிய கட்டம் இதுவாகும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை
வைக்கும் இந்திய மத்திய அரசு ஒரு பாரிய வரலாற்றுத் தவறை இழைக்கின்றது.
No comments:
Post a Comment