Wednesday, March 21, 2012

நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை - ஜநா நிபுணர் குழு அறிக்கை, ஒரு ஒப்பீடு.

இலங்கை அரசு சர்வதேசக் கண்டனங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நல்லிணக்க ஆணைக் குழுவை நியமித்தது. நல்லிணக்க ஆணைக் குழுவின் தலைவராக முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டார்.
திருகோணமலையில் ஜந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, பட்டினிக்கு எதிரான பிரெஞ்சு தொண்டர் அமைப்பின் பதினாறு பணியாளர்கள் படுகொலை, அம்பாறையில் முஸ்லிம்கள் படுகொலை உட்படப் பதினேழு மனித உரிமை மீறல்களை விசாரணை செய்ய ஒரு ஆணையத்தை அரசு 2007ல் நியமித்தது.

சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஆணையத்தை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது. அரசிற்கு உதவி செய்யும் தோரணையுடன் சர்வதேச சமூகம் ஒரு International Independent Group of Eminent Persons என்ற அமைப்பை உருவாக்கி அரசு நியமித்த ஆணையத்தைக் கண்காணிக்க அனுப்பியது.
இந்த ஆணையம் அப்போது சட்டமா அதிபராகப் பதவி வகித்த சி. ஆர்.டி சில்வாவின் தiலையீட்டால் சரிவர இயங்காமல் இடை நிறுத்தம் செய்யப்பட்டது. அதே சில்வா தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படுகிறார். ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலுக்கு சென்ற சில்வா 2007ம் ஆண்டின் ஆணையத்தைத் தொடர்ந்து நடத்தப் போவதாக உறுதிமொழி வழங்குகிறார்.
இதை ஒரு வரும் நம்பத் தயாரில்லை. 2007ம் ஆண்டில் இலங்கை அரசின் ஆணையத்தைக் கண்காணிப்பதற்கு இலங்கை வந்த கண்காணிப்பாளர்கள் விசாரணையைத் தொடர அரசிற்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் தலைமை நீதியரசர் பசுபதி மேற்கூறிய கண்காணிப்புக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்துவதற்குப் பொருத்தமான சாதக நிலை இலங்கையில் இல்லை என்று பசுபதி தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார். 2012 டிசெம்பரில் வெளிவந்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை பற்றியும்  நீதியரசர் பசுபதி போல் குறிப்பிட முடியும்.
நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் பாரதூரமான குறைபாடுகள் இருக்கின்றன. சர்வதேச சமூகத்தைச் சமாளிப்பதற்காகச் செய்யப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையில் இலங்கை அரசுத் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள் புரிந்த போர்க் குற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை. குற்றங்கள் நடவாமல் எதுவித அத்துமீறல்களுக்கும் இடமளிக்காமல் புனிதப் போர் நடத்தப்பட்டதாக அது கூறுகிறது.
இலங்கையில் குற்றம் செய்த படையினருக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வும் இராசதந்திரப் பதவியும் வழங்கப்படுவதுதான் இலங்கை மரபு. இதை Impunity அதாவது இராணுவக் குற்றவாளிகளுக்கு அரசு வழங்கும் பாதுகாப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜநா நியமித்த நிபுணர்கள் குழு அறிக்கை இதற்கு மாறாக இலங்கை இராணுவம் திட்டமிட்டுப் பரவலாகப் புரிந்த போர்க் குற்றங்களைப் பட்டியலிடுகின்றது. இலங்கைப் போரில் இலங்கைப் படைகள் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதநேயச் சட்டங்களை மீறியதாக ஜநா அறிக்கை திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது.
மனிதநேயச் சட்டங்களை எடுத்துக்கூறும் நான்கு ஜெனிவா உடன்படிக்கைகளிலும் இலங்கை அரசு ஒப்பமிட்டுள்ளது. போரில் பங்கு பற்றாத பொது மக்களையும் போரில் ஈடுபடுவோரையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பது ஜெனிவா உடன்படிக்கைகளின் அடிப்படைத் தத்துவம். இதை மீறிய இலங்கை அரசு பொது மக்களைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியது.
போரின் இறுதிப் பகுதியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற முடிவுக்கு ஜநா நிபுணர் குழு அறிக்கை வந்துள்ளது. இலங்கையில் நடந்த பாரதூரமான போர் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிப்பட்ட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைக்கும் ஜநா நிபுணர் குழு அறிக்கைக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கிறது. நிபுணர் குழுவின் அறிக்கை ஜநாவின் அறிக்கை, நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை குற்றம் புரிந்த அரசு வெளியிட்ட கறுப்பை வெள்ளையாக்கும் அறிக்கை. அதற்கு அங்கீகாரம் வழங்கும் சர்வதேச சமூகம் தவறிழைக்கிறது.

No comments:

Post a Comment