Wednesday, March 07, 2012

இலங்கைக்கு ஆதரவு வழங்கினால் மலேயசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடும் - மலேசிய அரசுக்கு எச்சரிக்கை


ஐ.நா மனித உரிமைச் சபையில், இலங்கைக்கு மலேசியா ஆதரவு தெரிவிக்குமெனில், ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது, வரும் தேர்தலில் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமென மலேசிய ஊடகமொன்று எச்சரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையில், இலங்கையை நோக்கிய பிரேரணையை மலேசியா எதிர்க்கும் என்ற செய்தி மலேசியத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

இந்நிலையிலேயே, மலேசியத் தமிழர்களின் உணர்வலைகளை மேற்கோள்காட்டி, மலேசிய ஆளும் அரசுக்கு மலேசிய ஊடகம் எச்சரித்துள்ளது.

மலேசியாவில் உள்ள 20 லட்சம் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளை புறந்தள்ளி, சிறிலங்காவுக்கு ஆளும் மலேசிய அரசு ஆதரவு வழங்குவது ஆபத்தான அரசியல் என அது எச்சரித்துள்ளது.

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.மனோகரன், ஜொஹாரி அப்துல் மற்றும் செனட்டர் எஸ்.ராமகிருஸ்ணன் ஆகியோர் கடந்தாண்டு சிறிலங்காவுக்கு சென்று, தமிழர்களின் நிலைகுறித்தான ஆய்வறிக்கையொன்றினை வெளிப்படுத்தியிருந்ததோடு, மலேசிய அரசுக்கும் இதனை சமர்பித்திருந்தனர்.

இந்நிலையில், மலேசிய அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்து, இவர்கள் கடும் ஆட்சேபத்தை ஆளும் மலேசிய அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள இந்திய தமிழ் சமூகத்தின் கோரிக்கைக்கு மலேசிய பிரதமர் செவிசாய்க்க வேண்டும் என மலேசியப் பாராளுமன்ற உறுப்பினர் மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளாதாகவும் மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மலேசிய அரசின் சிறிலங்கா சார்பு நிலைகுறித்து எதிர்கட்சிகள் கூட்டிணைவாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ஏற்கனவே மலேசிய தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment