Saturday, March 10, 2012

ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!

geniva_film_001ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் 10ஆவது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் இடம்பெற்றுவரும் வேளையில், இந்த மனித உரிமைகளுக்கான
அனைத்துலக திரைப்பட விழா முக்கியதுவம் உள்ளதாக விளங்குகின்றது.
இத்திரைப்பட விழாவில் பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டதோடு, சனல்-4 தொலைக்காட்சியின் சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பிலான புதிய ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளது.
இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலின் போது, ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் Louise Arbour , ஐ.நா நிபுணர் குழுவில் அங்கம் வகித்த Yasmin Sooka, பிரித்தானியாவின் பிரபல திரைக்கலைஞர் Callum Macrae சிறிலங்காவின் ஊடகவியலாளர் Sunanda Deshapriya மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகர் Jonathan Miller ஆகியோர் பங்கெடுத்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இத்திரையிடலின் போது, பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 2ம் திகதி முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இடம்பெறும் இத்திரைப்படவிழாவில் மனித உரிமைகள் தொடர்பிலான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு வருவதோடு கண்காட்சிகள், கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கையின் கொலைக்களங்கள் அரங்கம் நிறைந்த காட்சியாக திரையிடப்பட்ட போது, திரையில் தோன்றிய காட்சிகள் பார்வையாளர்களை கடும் அதிர்வலைகளை ஏற்பாடுத்தியது.
அரங்கு முழுவதும் நிசப்தம் பரவியிருந்தமை, இந்த ஆவணப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெகுவாக உணர்த்தியது. மேலும் பங்கெடுத்தக் கொண்ட வல்லுனர்களின் கருத்தாடல், ஈழத்தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்களுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நின்றது.
இத்திரையிடலுக்கு அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் முக்கிய பாத்திரம் வகித்திருந்தது.
இதன் தொடர்சியாக எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 18:45 மணிக்கு, சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பிலான சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்படம், முதன்முறையாக திரையிடப்படுகின்ற திரைப்பட விழாவகாக, இந்த ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்பட விழா அமைகின்றமை இங்கு குறிப்பிடதக்கது என தெரிவித்தனர்.Posted by SankathiWPadmin on March 10th, 2012

No comments:

Post a Comment