Monday, April 16, 2012

சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியா மற்றும் அமெரிக்கா பயணம்


இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் மே மாத இறுதியில் இந்தியாவுக்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சர்வதேசத்தின் ஆதரவைத் தேடும் நோக்கில் இந்தப் பயணங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, அவை மீள ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்தியா அது தொடர்பாக தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இப்பயணத்தின் போது முன்வைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய அரசியல் தலைமைகளைச் சந்திப்பதாக உள்ளபோதும் அவர்கள் அங்கு யார், யாரைச் சந்திப்பார்கள் என்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை, கூட்டமைப்பினர் இந்தியா சென்று திரும்பியதும் தமிழரசுக் கட்சியின் மாநாடு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கூட்டமைப்பின் குழு மீண்டும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறது.
அங்கு அமெரிக்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் உட்படப் பலரை இவர்கள் அங்கு சந்தித்துப் பேசுவார்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment