Thursday, April 12, 2012

என்னை கடத்தியவர்கள் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவையை சேர்ந்தவர்களே: குணரட்ணம்


தன்னைக் கடத்திச் சென்ற நபர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்பு துறையினரே என்றும், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன் என பிறேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்ட பிறேம்குமார் குணரட்ணம் பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,

நான் தங்கியிருந்த அறைக்குள் திடீரெனப் புகுந்த சுமார் 15 வரையிலான கடத்தல்காரர்கள், என்னை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர்.
அவர்கள் நிச்சயமாக அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரே.
கடத்திய பின் என்னை இராணுவ முகாம்களிலோ, காவல் நிலையங்களிலோ தடுத்து வைத்திருக்கவில்லை. எனவே அவர்கள் யார் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
ஆனால் அவர்கள் நடந்து கொண்ட கடுமையான முறைகளில் இருந்து, அரசியல் அங்கீகாரம் கொண்டவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவைகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
என்னைக் கடத்தியவர்கள் உடனடியாக சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் தமது உத்தியை மாற்றிக் கொண்டனர்.
இந்தக் கடத்தலை என் மீதான தெளிவானதொரு கொலை மிரட்டலாகவே நான் பார்க்கிறேன்.
இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என் நினைத்தேன்.
எனது அரசியல் தொடர்பாக, கட்சி தொடர்பாக, அதன் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக, உதவியாளர்கள் தொடர்பாக பல கேள்விகளை அவ்கள் எழுப்பினர்.
எனது போலியான அடையாளங்கள் பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குணரட்ணத்தை சிறிலங்கா அரசபடைகள் கடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.[ வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012, 04:01.12 AM GMT ]

No comments:

Post a Comment