Friday, April 20, 2012

தமிழ்மக்களுடன் சுதந்திரமாக பேசமுடியாதபடி இந்தியக் குழுவுடன் ஒட்டிக்கொண்ட சிறிலங்கா அமைச்சர்கள்


Sushama-IDPsசிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுடன் சுதந்திரமான முறையில் பேச முடியாத வகையில் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் அவர்களுடன் நிழல் போல ஒட்டிக் கொண்டு திரிந்தனர். இந்தியக் குழுவினர் நேற்று செட்டிக்குளத்தில் அமைந்துள்ள மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர்.

உலங்குவானூர்தி மூலம் நேற்றுக்காலை மெனிக்பாம் முகாமுக்கு சென்ற போது, அங்கு சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோனும், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும், வவுனியா அரசஅதிபர் மற்றும் வன்னிப் படைகளின் தளபதியும் வரவேற்கத் தயாராக நின்றனர்.
இதனால், சிறிலங்கா அமைச்சர்கள் மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்தியக் குழுவினரால் பொதுமக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
பின்னர், இந்தியக்குழுவினர் தாம் சுதந்திரமான முறையில் சென்று மக்களுடன் கலந்துரையாட விரும்புவதாக கூறினர்.
அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது ஊடகவியலாளர்களும்  அவர்களுடன் சென்றனர்.
ஆனாலும் இந்தியக் குழுவினர் பொதுமக்களை சந்திக்கும் போது, அங்கு சாதாரண உடையில் இராணுவப் புலனாய்வாளர்கள் அதிகளவில் சுற்றித் திரிந்தனர்.
ஊடகவியலாளர்கள் என்ற போர்வையிலும் சிலர் காணப்பட்டனர்.
இதனால் பொதுமக்கள் வெளிப்படையாக தமது கருத்துகளை, குறிப்பாக இராணுவ நெருக்குவாரங்கள் குறித்த கருத்துகளைக் கூறும், வாய்ப்பு இருக்கவில்லை.
ஆனாலும் அவர்கள் தாம் அந்த முகாமில் போதிய வசதிகளின்றி பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும், தம்மை மீண்டும் முகாமுக்கள் அடைக்கவே முயற்சிக்கப்படுவதாகவும், சொந்த இடத்திலேயே மீளக்குடியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதுபற்றி இந்தியக் குழுவிடம், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் முரளிதரன், அங்குள்ள மக்களால் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாது என்றும், அவர்கள் வாழ்ந்த பகுதியில் நிரந்த படைத்தளம் அமைக்கப்படுவதால் அங்கு மீள்குடியமர்வு சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
எனினும் முகாமிலுள்ள மக்கள் அனைவரும் ஜுன் மாதத்துக்குள் வேறு இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், புளியங்குளத்தில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம், இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டம் ஆகியவற்றையும் இந்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
அப்போதும் சிறிலங்கா அமைச்சர்களும், இராணுவ அதிகாரிகளும் கூடவே சுற்றினர்.
பின்னர், முல்லைத்தீவு மருத்துவமனைக்கான கருவிகள் வழங்கும் நிகழ்வு, முள்ளியவளையில் வீடுகள் கையளிப்பு நிகழ்வு, தண்ணீரூற்று பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஆகியவற்றிலும் இந்தியக்குழுவினர் பங்கேற்றனர்.
இதன்போதும், சிறிலங்கா அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுனர் சந்திரசிறி ஆகியோர், இந்தியக் குழுவினருடன் இணைந்து கொண்டு திரிந்ததால், பொதுமக்களுடன் சுதந்திரமாக உரையாடும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதன்பின்னர் நேற்றுமாலை இந்தியக்குழுவினர் யாழ்ப்பாணம் சென்று தரையிறங்கினர்.
அங்கேயும், சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுமே முன்னுக்கு நின்றனர்.
இந்தியக் குழுவினரை வரவேற்ற அவர்கள் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக பேருந்தில் புறப்படும் வரை அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டிருந்தனர்.
இதன்காரணமாக, வடக்கில் நேற்று இந்தியக் குழுவினர் மேற்கொண்ட பயணத்தின் போது, பொதுமக்களுடன் சுதந்திரமாக கலந்துரையாடி தகவல்களைச் சேகரிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment