மருண்டவன்
கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் தனது
பாவங்களாலேயே மருண்டு போய் நிற்பவனுக்கு இருண்டது மட்டுமல்ல வெளிச்சமும்
கூடப் பேய் தான்.ஆங்கிலத்தில் சிறுவர் கதை ஒன்று உண்டு.ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் தங்கள் செம்மறியாடுகளை மேய்ப்பதற்கு ஒரு சிறுவனை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊரில் காட்டிலுள்ள ஓநாய்கள்
உட்புகுந்து ஆடுகளைக் கொன்று தின்று விடுவதுண்டு. எனவே, சிறுவனிடம் ஓநாய்கள் வந்து விட்டால் “ஓநாய் ஓநாய்” எனக் கத்தும் படியும,; அக்குரல் கேட்டு தாங்கள் ஓடிவந்து ஓநாய்களை விரட்டுவதாகவும் கூறியிருந்தனர்.
சிறுவனும் அதை ஏற்றுக்கொண்டு ஆடுகளை மேய்க்கப் புறப்பட்டான். ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு தான் கத்தினால் விவசாயிகள் வருவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது. எனவே அவன் ஓநாய்கள் வராமலே “ஓநாய் ஓநாய்” எனக் கத்தினான்.

உடனடியாகவே விவசாயிகள் கம்புகள் தடிகளுடன் ஓடி வந்து விட்டனர். அங்கு ஓநாய்கள் வரவில்லை எனக் கண்ட விவசாயிகள் இனிமேல் அப்படி பொய்யாகக் குரலெழுப்பக் கூடாது எனச் சிறுவனை எச்சரித்து விட்டுப் போய் விட்டனர். சிறுவனோ விளையாட்டாக அடிக்கடி “ஓநாய் ஓநாய்’’ எனக் கத்த ஆரம்பித்தான். விவசாயிகளும் ஒவ்வொரு முறையும் இவனின் கூக்குரல் கேட்டு ஓடி வருவதும் ஏமாந்து திரும்பி செல்வதுமாக இருந்தனர். ஒருநாள் உண்மையாகவே ஓநாய்கள் கூட்டமாக வந்து விட்டன. அவை ஆடுகளைக் கடித்துக் கொல்லவே சிறுவன் “ஓநாய் ஓநாய்’’ எனக் கத்தினான். விவசாயிகளோ வழமை போல சிறுவன் விளையாட்டாகக் கத்துகிறான் என எண்ணி எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
ஓநாய்கள் ஆடுகளைக் கொன்றது மட்டுமன்றி சிறுவனையும் கடித்துக் குதறி விட்டுப் போய் விட்டன. இந்த ஓநாயும் இடையனும் என்ற கதையில் வருவது போலவே இலங்கையிலும் சில “புலி வந்திட்டுது புலி வந்திட்டுது’’ என்ற நாடகம் அடிக்கடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டனர் என வீராப்பு பேசிய அரச தரப்பினரே இப்போது “புலி வருது” கூச்சலை எழுப்பி விடுகின்றனர். சில மூன்றாம் தரமான அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இப்படியான நடவடிக்கைகள்; மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவை ஓநாயும் இடையனும் கதையை நினைவூட்டத் தவறவில்லை.
அண்மையில் திருகோணமலையில் கடற்கரைப்பிரதேசங்களில் பெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி புல்மோட்டைக்கும் நிலாவெளிக்குமிடையே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அப்பாதையில் பயணிப்பவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களின் பயணப் பொதிகளும் வாகனங்களும் சல்லடை போடப்பட்டன. அதுமட்டுமன்றி அவ்வீதியில் திடீர் வீதிச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள மூன்று இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 விடுதலைப்புலிகள் மீனவர்கள் போன்று இங்கு வந்து இறங்கிவிட்டதாகவும் அவர்களைப் பிடிக்கவே சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கதை பரப்பப்பட்டது. சில சிங்களப் பத்திரிகைகளும் இந்தியப் பயிற்சி முகாம்கள் பற்றி;யும் விடுதலைப்புலிகள் வந்து இறங்கியமை பற்றியும் திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டன.
இ;நதியா ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நிலையில் திட்டமிட்ட வகையில் இந்தியாவைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இச்செய்தி இந்தியாவுக்குக் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு காவல்துறை ஆணையாளர் இச் செய்தியை அடியோடு மறுத்தது மட்டுமன்றி தனது கண்டனத்தையும் தெரிவித்தார். அதே வேளை இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும் இத்தகவலை நிராகரித்து விட்டார்.
எப்படியிருப்பினும் ஓநாயும் இடையனும் என்ற சிறுவர் கதையில் வரும் இளைஞனைப் போலவே இலங்கை தரப்பில் அடிக்கடி புலிவருது புலிவருது என்ற கூக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது. ஏன் இந்த நிலைமை திட்டமிட்டு அடிக்கடி தோற்றுவிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்படும் போது இன்றைய அரசின் மக்கள் விரோதப் போக்கை மறைக்கும் கவசமாகப் ‘புலி எதிர்;ப்பு’ என்ற சுலோகம் எழுப்பப்பட்டு வருகிறது என்ற உண்மைப் புரியவரும்.
ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கையில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள,; மனித உரிமைகள் மீறல்கள் என்பன சர்வதேச அளவில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதுடன் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியளவு இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலங்களில் தாம் உலகிலேயே மிகப்பயங்கரமான பயங்கரவாதிகளை வெற்றி கொண்டு அழித்து விட்டதாகக் கூறி வந்துள்ளதுடன் தான் மேற்கொண்ட இன அழிப்புப் போரை உலகப் பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய போரின் ஒரு பகுதி எனவும் வர்ணித்து வந்தது. அதுமட்டுமன்றி போரின் வெற்றி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இலங்கை அரசு உள்நாட்டு அரசியலை நெறிப்படுத்துகிறது.
ஆனால் இன்று சர்வதேசம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள், தேசிய நல்லிணக்கத்துக்கும் சமாதானத்திற்கும் எதிரான முன்னெடுப்புகள் என்பவற்றைச் சரியாக இனம் கண்டு கொண்டுள்ளது. அதன் காரணமாக ஜெனீவாத் தீர்மானம் மென்மையான வாசகங்களைக் கொண்டிருந்த போதும் அதன் பின்னணியில் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.
இலங்கை அண்மையில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஏற்கனவே வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட கடனின் ஏழாவது பகுதியைப் பெற்றுள்ளது. இது தவிர வட்டிக்கும் வழங்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் ஏனைய நாடுகளுக்கு ஒரு வீதம் அல்லது ஒன்றரை வீத வட்டிக்கே கடன் வழங்குவதுண்டு. அப்படியிருந்த போதிலும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினாலே அது கடன்களை வழங்கும்.
அதன் நிபந்தனைகளில் முக்கியமானது அரச செலவினங்களைக் குறைத்தல், அபிவிருத்திப் பணிகளில் தனியார் துறையை ஊக்குவித்தல் என்பனவாகும்.
அரச செலவினங்களைக் குறைத்தல் என்பது கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை வெட்டுதல், அரச பணியாளர்களின் தொகையைக் குறைத்தல், ஊதிய உயர்வுகளை இரத்துச் செய்தல் அல்லது மட்டுப்படுத்தல், மானியங்களை நிறுத்துதல் என்பனவாகும்.
ஏற்கனவே சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை காரணமாக இலங்கையில் எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலைகள் மின்சாரக் கட்டணம் என்பன பெருமளவில் விலையுயர்த்தப்பட்டன. எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும், அதிகரித்த போக்குவரத்துச் செலவு உயர்வு காரணமாகவும் சகல பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டன.
அதுமட்டுமன்றி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலாங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததை அடுத்து இறக்குமதிப் பொருட்களில் விலை மேலும் அதிகரித்தது.
கடைசியாக நடுத்தர, சாதாரண மக்களின் பாவனையில் இருக்கக் கூடிய வாகனங்களுக்கான இறக்குமதி வரி பெரும் விகிதத்தால் அதிகரிக்கப்பட்டு விட்டது.
அதாவது நடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கைச் செலவை விட அது இப்போது இரண்டு மடங்குக்குக் மேலாக அதிகரித்து விட்டது.
அதேவேளை, ஊதிய உயர்வு கோரியோ விலைவாசி உயர்வுக்கு எதிராகவோ மேற்கொள்ளப்படும் மக்களின் போராட்டங்கள் ஆயுதமுனையில் அடக்கப்படுகின்றன. இதனால் சில உயிர்களும் பறிக்கப்படுகின்றன.
அதேவேளையில் இன்னொரு புறம் அரசாங்கக் கட்சியினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் அதிகார வெறியாட்டம் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், கப்பம், மிரட்டல் என அரச தரப்பினரே சட்டம் ஒழுங்கைக் காலில் போட்டு மிதிக்கும் நிலை நிலவுகிறது.
இப்படியான ஒரு நிலையில் மக்கள் பொங்கி எழுவதும் கிளர்ச்சிகளில் இறங்குவதும் நாட்டில் பெரும் அமைதியின்மை ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் அரசோ போரின் வெற்றியையும் தமிழ் மக்களுக்கெதிரான இனவெறியும் அத்தனையையும் தூண்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வந்தது. தமிழ் மக்கள் தங்களின் நியாயபூர்வமான உரிமைகளைக் கோருவது என்பது நாட்டைப் பரிக்கும் நோக்கத்தைக் கொண்டது என்ற பெரும் மாயையை அரசு ஏற்படுத்தி வந்தது. அதுமட்டுமன்றி, பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து சிங்கள மக்களை மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் மக்களையும் காப்பாற்றி விட்டதாக மார்தட்டியது.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் இப்பொய்மைப் பரப்புரையில் நம்பிக்கை கொண்டனர். அப்படி அதை ஏற்றுக்கொள்ள மறுத்து உண்மையை வெளிக்கொண்டு வர முயன்ற சிங்கள அறிவியலாளர்கள் தேசத்துரோகிகள் எனப்பட்டம் சூட்டப்பட்டனர். பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டு காணாமல் போயினார். நாட்டை விட்டு துரத்தப்பட்டனர்.
இன்று இந்நிலைமையில் வேகமாகவே மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரச சார்பு ஊடகங்களின் பொய்யுரையை மீறி மக்கள் மெல்ல மெல்ல உண்மைகளைக் கண்டுணர ஆரம்பித்துவிட்டனர்.
எனவேதான் “புலி வருது” கோ~ம் எழுப்பப்பட்டு மீண்டும் மக்களை மாயையில் அமிழ்த்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது. இது சர்வதேசமட்டத்தில் ஒரு விதமாகவும் உள்@ரில் இன்னொரு விதமாகவும் கையாளப்படுகின்றது.
சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகளும் ‘சனல் – 4’ போன்ற சுதந்திர ஊடகங்களும் விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுகின்றன எனப் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையிலோ இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகள் மீண்டும் வந்து போராட்டத்தை ஆரம்பிக்கப் போகின்றனர் என்ற மாயை ஏற்படுத்தப்படுகிறது.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் தனது பாவங்களாலேயே மருண்டு போய் நிற்பவனுக்கு இருண்டது மட்டுமல்ல வெளிச்சமும் கூடப் பேய் தான்.
எனவே, இலங்கை அரசுக்கு அடிக்கடி புலி வந்து கொண்டேயிருக்கும்.
-மருதநிலவன்-
நன்றி ஈழமுரசு கனடா
No comments:
Post a Comment