Friday, April 13, 2012

இந்தியா, பிராந்திய வல்லரசா, உலகதர வல்லரசா? – க.வீமன்

இந்தியா அதிசக்திவாய்ந்த பிராந்திய வல்லரசு என்பதில் சந்தேகமில்லை. அது உலக தரத்திற்கு வளர முயற்சிக்கிறது என்பது உண்மையானாலும் சாத்தியம் மிகக் குறைவு. ஆரம்பந் தொட்டே இந்தியா தனித்தியங்கும் வலுவை இழந்து விட்டது. வல்லரசு என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த அடையாளம் இந்தியாவிடம் இல்லை.

இராணுவ வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
எதிரிகளைச் சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. பாக்கிஸ்தானின் கிழக்கு அலகை வெட்டித் தள்ளி அந்த இடத்தில் வங்காள தேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கியது.
அதே ஆண்டு தொட்டு இந்தியா சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகள் எதிரும் புதிருமாக இருக்கின்றன. பாக்கிஸ்தானும் சீனாவும் பிரிக்க முடியாத நட்பு நாடுகளாக மாறிவிட்டன.
வங்காள தேசத்தின் நன்றி கலந்த நட்பையும் இந்தியாவால் தக்க வைக்க முடியவில்லை. இந்த நாட்டிற்குள்ளும் சீனா புகுந்து விட்டது. சித்தாகொங் துறைமுக வசதிகளை சீனா பெறுவதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை.
சுண்டைக் காய் பருமனான இலங்கை இந்தியாவைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்துகிறது. மானமுள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனாலும் இதைச் சீரணிக்க முடியவில்லை. ஈழத் தமிழர்களை அழிக்க உதவிய மத்திய அரசைத் தமிழகம் வெறுப்புடன் நோக்குகிறது.
6.4மில்லியன் தமிழக மக்களின் இளைய தலைமுறை மத்திய அரசிற்கு விசுவாசமாக இருப்பார்களா என்பது சந்தேகம். இது மாத்திரமல்ல உள்விவகாரத்தின் நீட்சி தான் வெளிவிவகாரக் கொள்கை என்று கூறுகிறார்கள்.
இந்தியாவின் உள்விவகாரம் திருப்திகரமாக அமையவில்லை. மாவோயிஸ்ற் கிளர்ச்சி, காஷ்மீர் பிரச்சனை, நதி நீர்ப் பங்கீடு, மின்சாரத் தட்டுப்பாடு, சாதிக் கொடுமை, ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வு, விவசாய உற்பத்தி வீழ்ச்சி, ஊழல் என்ற இன்னோரன்ன உள்நாட்டுப் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.
அடுத்த தேர்தல் வெற்றி பற்றிச் சிந்திக்காமல் மேற்கூறிய பிரச்சனைகளில் ஒன்றையாவது கையாளும் திறமை இந்திய அரசியல்வாதிகளுக்கு இல்லை. இந்தியாவைப் பீடித்துள்ள சர்வ வியாபியான நோய்களைப் புற்று நோய்க்கு ஒப்பிட முடியும்.
அமெரிக்காவுக்கும் ஜக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான நட்பை “விசேட உறவு” (Special relationship) என்று வர்ணிக்கிறார்கள் அப்படியான உறவு இந்தியாவுக்கும் பிறிதொரு உலக நாட்டிற்கும் இடையில் இல்லை.
சீனா விசேட உறவுகளை ருஷ்யா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமாக வளர்த்துள்ளது. இந்தியாவின் பிராந்திய வல்லரசு வளர்ச்சிக்குப் பிறகு தெற்கு ஆசிய நாடுகள் இந்தியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குச் சீனாவின் நட்பை நாடியுள்ளன.
இந்தியாவின் நட்பைத் தேடிப் பெறும் நாடுகள் கிட்டத்தட்ட இல்லை எனலாம். வங்காள தேசத்தை உருவாக்கிய இந்தியா ஒரு முக்கிய பாடத்தைக் கற்றுள்ளது. நன்றிக் கடனைப் பெறுவதற்கு தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
வங்காள தேசம் இந்தியாவிடம் பணிவையும் முடிவில்லாத விட்டுக் கொடுப்புக்களையும் எதிர்பார்த்தது. தமிழீழத்தை உருவாக்க இந்தியா உதவியிருந்தால் அதுகும் வங்காள தேசம் போல் இந்தியாவின் காலடியில் கிடக்காமல் விடலாம் அல்லாவா?
அதற்காகத் துருப்புச் சீட்டாகச் சீனா நட்பை வைத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு உதவிய இந்தியாவால் என்னத்தைச் சாதிக்க முடிந்தது? இந்தியா தொடர்ச்சியாகத் தனக்கு உதவ வேண்டும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.
ஜெனிவாவில் தமிழ் நாட்டின் அழுத்தம் அமெரிக்காவின் கோரிக்கை ஆகியவற்றிற்காக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இலங்கையின் கடுஞ்சினத்தை இந்தியா வலிந்து பெற்றுள்ளது.
தீவிரவாதிகள் இந்திய மண்ணில் இருந்து இலங்கையைத் தாக்க வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுடன் இந்தியாவின் முகத்தில் கரிபூச இலங்கை அரசு தொடங்கியுள்ளது. தனது விரிந்த பொருளாதார கடல் வலயத்திற்குள் அந்தமான் நிக்;கோபார் தீவுகள் வருகின்றன என்ற உரிமைக் கோரிக்கையையும் இலங்கை எழுப்பியுள்ளது.
இந்த வாரத்தின் முக்கிய செய்தியாக தமிழகக் கரையோரக் கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகள் மூலம் தனது நாட்டு மக்களுக்கு ஆபத்து வரவிருப்பதாக இலங்கை பகிரங்கக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.
இந்தியா உதவப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குறுகிய காலச் சிந்தனையுடன் (Short term thinking) செயற்பட்டுள்ளனர். ஆனால் தமிழீழத்தை உருவாக்க உதவினாலும் அதனுடைய தொடர்ச்சியான விசுவாசத்தைத் தக்க வைக்க முடியுமா என்பது முக்கிய கேள்வி.
இந்தியா ஒரு உலகதர வல்லரசாக வரும் தகுதி இருக்கவே செய்கிறது. பல்துருவ உலகில் (multi polar world) பிறிக் (BRIC) நாடுகளில் ஒன்றாக இடம் பெறும் வாய்ப்பு அதற்கு இருக்கிறது.
பிறேசில், ருஸ்யா, இந்தியா, சீனா ஆகியவற்றை பிறிக் நாடுகள் என்று சொல்வார்கள். இந்தியாவுக்குப் போட்டி நாடான சீனா பிராந்திய வல்லரசுக் கட்டத்தைக் கடந்து உலக தர வல்லரசு நிலைக்கு வந்துள்ளது.
அதே நிலைக்கு இந்தியா வர இன்னும் கால் நூற்றாண்டு பிடிக்கும். அதற்கு முதல் இந்தியா உட்புறமாக வெடிக்காமல் (Implosion) இருக்க வேண்டும் என்று ஒவ்வாரு இந்தியனும் வேண்டுகிறான்.

No comments:

Post a Comment