Sunday, April 29, 2012

தமிழர் முஸ்லிம்கள் இணைவதன் மூலம் பேரினவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம்

ponselvarasa இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் மீதான பேனவாதத்தின் அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணள்ளன. எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் உறுதிபட இணைவதன் மூலம் இப்பேனவாதத்திற்கு சாவு மணி அடிக்கலாம். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அறைகூவல் விடுத்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அமரர் தந்தை
எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு ஆலையடி வேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, இன்றைய தினத்தில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டங்களுடன் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்கின்றனர். சிறுபான்மை சமூகங்கள் மீதான பேரினவாதத்தின் அடாவடித்தனங்களுக்ககு எதிரான இத்தகைய நிகழ்வில் நாம் சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் உரியவேளையில் இதற்கான அழைப்பு எமக்கு விடுக்கப்படாமையால் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பங்குகொள்கின்றோம்.
இந்த நாட்டில் சிங்கள பேரினவாதத்தின் இனவாத அடாவடித்தனங்கள் சிறுபான்மையினம் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டு கப்பலில் வட கிழக்கிற்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு சிங்களப் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் திட்டமிட்டு தமது அடாவடித்தனங்கள் மூலம் விரட்டப்பட்டது போல் இன்று தென்பகுதியிலிருந்தும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலிருந்தும் முஸ்லிம் மக்களை வெளியேற்றுவதற்கு இப் பேரினவாதம் இணைந்துள்ளமையை இன்று நாம் காண்கிறோம்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் முஸ்லிம்களின் தர்ஹா ஒன்றைப் பௌத்த துறவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதனை மீளக்கட்டியெழுப்ப முடியாத துர்பாக்கியம் நிகழ்ந்துள்ளமையும் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.
அத்தகைய சம்பவத்திற்குப் பிறகும் கூட முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவளித்தே வந்தனர். ஏன் அரசுக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியிலிறங்கி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்ததோடு ஜெனீவா சென்றும் அரசுக்கு கைகொடுத்தனர். இதற்கு கைமாறாக முஸ்லிம்களுக்கு அரசு அடித்த சவுக்கடியும் இந்த நன்றிக்குப் பேனவாதம் கொடுத்த நன்றிக் கடனும் தான் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவமாகும் எனக் கொள்ளவேண்டியுள்ளது.
எனவே குட்டக்குட்ட குனிபவன் மடையன் என்பது போல் இல்லாது முஸ்லிம் உணர்வுகளும் இந்த பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக எழும்ப வேண்டும்.
இந்த வகையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து பயணிப்பதன் மூலம் தான் பேரினவாதத்திற்கு இந்த நாட்டில் சாவு மணி அடிக்கலாமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இதற்கு ஏதுவாக முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வர வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன்.

No comments:

Post a Comment