Monday, April 23, 2012

உணர்வற்று கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம்



ஒன்பதாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.

நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர். அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, "சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம்", என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற்போதைக்கு தள்ளி வைப்பதாக ஏற்றுக் கொண்டனர்.

நேற்று மாலை 7.30 மணிக்கு செங்கல்பட்டு நகர தாசில்ந்தார் அரசின் சார்பாக முகாமின் நிலைமையை பார்வையிட்டார். அவர் அரசின் உயர் அதிகாரிகளுக்கு முகாமின் நிலை குறித்து தெரிவிக்க உள்ளார்.

இதனிடையே, முகாமில் உள்ள ஏதிலிகள், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத வேளையில், அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். நாளை, அதாவது செவ்வாய்கிழமை திரு. சந்திரகுமார் (வயது: 55) நீர், ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலையை மேற்கொள்ளவும், புதன் கிழமையன்று உண்ணாநிலை மேற்கொண்டு வரும்  திரு. சிறீ செயன் திரும்பவும், முகாமினுள் உள்ள மரத்தில் ஏறி தற்கொலைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதே வேளை, தமிழகத்தில் உள்ள உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் மற்றும் உலகத் தமிழர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செங்கல்பட்டு முகாம் ஏதிலிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விடுதலை கோரிக்கைகளை முன் வைத்து உயிருக்கு போராடும் ஏதிலிகளை கண்டு, காணாததுமாக இருக்கின்ற தமிழக ஊடகளும், தங்களின் நிலையை உலகுக்கு விளக்க வேண்டும் என அன்புடன் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment