Monday, May 14, 2012

இலங்கையில் ஆரம்பகாலத்தில் ஆண்ட மன்னர்கள் இந்துமதத்தவர்களே - விஜய மன்னன் கூட இந்துமதத்தையே சேர்ந்தவர்! விக்கிரமபாகு கருணாரத்ன

இலங்கையில் ஆரம்பகாலத்தில் ஆண்ட மன்னர்கள் இந்துமதத்தவர்களே. விஜய மன்னன் கூட இந்துமதத்தையே சேர்ந்தவர். அவ்வாறு ஆண்டுவந்தவர்கள் பல கோவில்களை நாட்டில் கட்டினார்கள் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அழிக்கும் நடவடிக்கையில் தற்போதைய பேரினவாத அரசு தொடர்ந்தும் ஈடுபடுமானால் தமது இனத்தின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தமிழர்கள் ஆயுதப் புரட்சியை மீண்டும் அணுகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஆரம்பகாலத்தில் இந்து மதமே இருந்தது என்ற வரலாற்றைப் பேரினவாத சக்திகள் அறியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை அரசின் மத ஆக்கிரமிப்பு நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் கலாநிதி விக்கிரமபாகு எச்சரித்தார். திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட அரசின் மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினர் விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என சர்வதேசத்திடம் உறுதியளிக்கும் மஹிந்த அரசு, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடுகின்றது. அத்துடன், தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அழித்து அவர்களின் அடையாளங்களை இல்லாதொழித்து பௌத்த மேலாதிக்கத்தை நாட்டில் நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கின்றது.
தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை அழிக்கும் கொடுங்கோல் செயல்களை மஹிந்த அரசு தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் தமது இனத்தின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் ஆயுதப் புரட்சியை நாடவேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவர். இலங்கையில் ஆரம்பத்தில் இந்து மதம்தான் இருந்தது. அதன் பின்னர்தான் பௌத்தமதம் வந்தது. ஆரம்பத்தில் ஒரு பௌத்த மதத்தவர் கூட இலங்கையில் இருக்கவில்லை. மஹிந்த தேரர்தான் பௌத்த மதத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார். இதுதான் வரலாறும்கூட.
இலங்கையை ஆண்ட அசோக மன்னன் கூட பௌத்தத்தைப் பரப்புவதற்கு இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. பௌத்த சமயத்தில் கூட குறிப்பிடப்படாத விடயங்களையே மஹிந்த அரசு முன்னெடுக்கின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை மீறிச் செயற்படுகின்றனர். விகாரைகள் உடைக்கப்பட்டே கோவில்கள் கட்டப்பட்டன என ஒருசிலர் பேரினவாதப் போக்கில் வரலாறு பேசுகின்றனர்.
இலங்கையில் ஆரம்பகாலத்தில் ஆண்ட மன்னர்கள் இந்துமதத்தவர்களே. விஜய மன்னன் கூட இந்துமதத்தையே சேர்ந்தவர். அவ்வாறு ஆண்டுவந்தவர்கள் பல கோவில்களை நாட்டில் கட்டினர். அதற்கான சான்றுகளும் உள்ளன.
எனவே விகாரைகள் உடைக்கப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டன எனக் கூறப்படுவது வரலாற்றை மாற்றியமைக்க முற்படும் செயல். இவை இடிக்கபட்டு விகாரைகள் கட்டப்பட்டிருக்கலாம் என்ற யதார்த்தத்தையே பேரினவாத சக்திகளின் கருத்துகள் எமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என்றார் அவர்.

No comments:

Post a Comment