Sunday, May 13, 2012

உலகெங்கும் உணர்வுபூர்வமாக தொடங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !


ninaivu20121ஈழத்தமிழர் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளது தமிழினப்படுகொலையின் குறியீடாகிவிட்ட, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின், மூன்றாமாண்டு நினைவேந்தல் வாரம், உலகெங்கும் உணர்வுபூர்வமாக  சனிக்கிழமை (12-05-2012) தொடங்குகின்றது.

மே 12ம் நாள் முதல் நினைவேந்தல் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு, மே 18ம் நாள் தமிழீழத் தேசியத் துக்க நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்தாண்டு பிரகடனப்படுத்தியிருந்தது.
இவ் நினைவேந்தல் வாரத்தில் இரத்த தானம், கண்காட்சி , துண்டுப்பிரசுர பரப்புரை, வழிபாடுகள் என தமிழீழ இனப்படுகொiலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினையும் வலியுறுத்தியும் பல்வேறு வடிவங்களிலும் இந்நாட்களில், முன்னெடுப்புகள் அமைந்திருக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா கண்டங்களெங்கும் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து நாடுகளில் மட்டுமல்ல, தமிழ்நாடு , மலேசியா, சிங்கப்பூர் என உலகத் தமிழர்களாலும் இந்நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை திட்டமிட்ட இனவழிப் போர் ஒன்றினை நடாத்தி, தமிழர்களின் நிலத்தினை வல்வளைப்பு செய்துள்ளதோடு, தமிழர்களை தனது இனவாதப்பிடிக்குள் வைத்திருக்கின்ற சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கமானது, தனது போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வுகளையும் வெற்றி அணிவகுப்புக்களையும், தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்க தயாராகி வருகின்றது.
இந்நிலையில் இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள்,முள்ளிவாய்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தி, சிறிலங்கா தொடர்பில் அனைத்துல சுயாதீன விசாரணைக்கு உரக்க வலியுறுத்துவதோடு, ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும், அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை உரக்க கோருவோம் என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே அறைகூவல் விடுத்துள்ளது.


No comments:

Post a Comment