Friday, May 04, 2012

இலங்கையில் நடைபெறும் பாலியல் வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு ஹிலாரியிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை

america_tamilar_obamaஇலங்கையில் நடைபெறும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளரான திருமதி ஹிலாரி கிளின்டன் 2009ல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் பேசிய போது, இலங்கை உட்பட சில நாடுகளில் ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறையானது ஓர் அரசியல் அடக்குமுறை கருவியாகவும், போர்
கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்றும், சபை உறுப்பினர்கள் இதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
திருமதி கிளின்டனின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கையில் நடைபெறும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை நிறுத்துவதற்கு உதவுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவம், தமது அடக்குமுறைக்கான திட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்ப் பெண்களுக்கு எதிரான பாலியல் பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருகின்றனர் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதை ஒரு போரியல் கருவியாக பயன்படுத்துவதாக திருமதி கிளின்டனும் 2009ல் ஐ.நா. சபையில் பேசியிருக்கின்றார்.
செப்டெம்பர் 2009ல் ஐ.நா. பாதுகாப்பு சபையில், திருமதி கிளின்டன் பேசும் போது,
பாலியல் வன்முறை ஒரு மனிதநேயமற்ற செயல் என்றும், இது ஒருவரை மட்டும்தாக்காது மொத்த சமூகத்தையுமே சிதைவடையச் செய்துவிடும் என்று கூறியதை அவருக்கு தாங்கள் ஞாபகப்படுத்துவதாகவும், இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அரசாங்க ஆதரவுடனான பாலியல் வன்முறைகளை நிறுத்த திருமதி கிளின்டனை நடவடிக்கை எடுக்குமாறும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மே 1ஆம் திகதி கிளின்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
போரினால் கணவன்மாரை இழந்த விதவைகள் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வரும் சந்தர்ப்பங்களில் அங்கு இராணுவத்தினரின் பிரசன்னம் எந்த நேரமும் இருக்கின்றது என்பதுடன், அந்தப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதையும் தாம் அங்கு வசிக்கும் தமிழர்களுடன் தொடர்பை வைத்திருப்பதன் மூலம் அறிவதாகவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் விளைவாகவே தற்கொலைகள், அனாதரவாக கைவிடப்படும் குழந்தைகள் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இவை இந்த பாலியல் பலாத்காரத்தின் ஒருபகுதியேயாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கணிப்பீடுகள் அண்மையில் வடகிழக்கில் விஜயம் மேற்கொண்ட இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட கணிப்பீட்டின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடிதத்தின் இறுதியில் திருமதி கிளின்டன் தலையிட்டு இலங்கையில் நடைபெறும் இந்த பாலியல் வன்முறை பயங்கரவாதத்தை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என தாம் நம்புவதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்
http://www.tamilsforobama.com/pressrelease/To_clinton_Stop_Rape_in_sri_Lanka.html
source:sankathi

No comments:

Post a Comment