Sunday, June 17, 2012

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளால் இலங்கைக்கு புதிய நெருக்கடி


geniva_meeting_004ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், 2013 மார்ச் மாதத்துக்குள் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தத் தகவலை ஜனாதிபதியின் செயலாளரும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, இலங்கைக்கு ஆதரவாக நின்ற இந்த நாடுகள் தொடர்ந்து தமது ஆதரவை வழங்குவதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள லலித் வீரதுங்க,
நல்லெண்ண அடிப்படையில் அவர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற முடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்பவில்லை. இதனால், அவர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமானது. அத்துடன் எமது உண்மைத்தன்மையையும் காண்பிக்க வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றங்கள் குறித்து அடுத்த மாதம் அமைச்சரவைக்கும் ஊடகங்களுக்கும் விளக்கமளிக்கப்படும். இந்த ஆண்டு சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்படும். ஏனையவை 2013ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்துக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரே, 2012ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு விட்டன. தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவதற்காக மொத்தமுள்ள 285 பரிந்துரைகளில் 33 பரிந்துரைகளை செயலணி தெரிவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment