Tuesday, July 17, 2012

தமிழகத்தின் குன்னூரில் இலங்கை படையினர் பயிற்சி! முற்றுகை செய்த 30 பேர் கைது!!

sri_lanka_military000-100x100இந்தியாவின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகள் நால்வர் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்தி இன்று வெளியானதையடுத்து இலங்கைப் படையினரின் வருகையை எதிர்த்து குன்னூரில் முற்றுகைப் போராட்டத்தை நடத்திய 30 பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை படைத்தரப்பினருக்கு இந்தியாவின் எப்பகுதியிலும் பயிற்சி வழங்கக் கூடாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இலங்கை இராபணுவ அதிகாரிகள் நால்வர் தமிழகத்திலுள்ள குன்னூர் வந்துள்ளார்கள்.
இலங்கையின்  இந்த நான்கு படைத்துறை அதிகாரிகளும் குன்னூர் தாஜ் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் நாளை இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் பயிற்சி நாளை நடைபெறவிருந்த நிலையில், இன்று இவர்கள் குன்னூர் பகுதியைச் சுற்றிப் பார்வையிட்டனர்.
இக்கருத்தரங்கில் சிறிலங்கா, பிரித்தானியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 நாடுகளின் படைத்தரப்பு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.  குன்னூருக்கு அருகேயுள்ள கொடா நாடு பகுதியிலேயே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது தங்கியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குன்னூருக்குச் சென்றுள்ள இலங்கையின் படைத்துறை அதிகாரிகளை அங்கிருந்து வெளியேற்றாவிட்டால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்ததை அடுத்து, போலீஸார் தாஜ்-கேட் வே விடுதிக்கு முன்னர் குவிக்கப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பு அந்தப் பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளையில் பிந்திக்கிடைத்த செய்திகளின் படி,
குன்னூரில் இலங்கை அதிகாரிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட கோயமுத்தூர், கோத்தகிரி, குன்னூர் பகுதி மதிமுகவினர் குவிந்தனர். வேன்களில் வந்த அவர்கள், சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களுக்கும் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாருக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டது. இதை அடுத்து போராட்டம் நடத்திய மதிமுகவினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை விமானப் படையினருக்கு சென்னை தாம்பரம் விமானப் படைத்தளத்தில் பயிற்சி வழங்குவதற்கு தமிழக அiசியல் தலைவர்களால் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment