Saturday, July 14, 2012

இலங்கையிடம் பணிவது ஏன்?






First Published : 14 Jul 2012 04:57:18 AM IST

சென்னை, ஜூலை 13: இலங்கை அரசிடம் மத்திய அரசு பணிந்து போவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து இங்கு பயிற்சி பெற வந்த இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.இது விஷயத்தில் மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி நிர்பந்திக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:இலங்கை விமானப் படையினருக்கு, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரியவந்தது.இதையடுத்து இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். மேலும் ஒட்டுமொத்த தமிழர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இதையடுத்து இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப் படை நிலையத்துக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்தத் தகவல் வரப்பெற்றவுடன் இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன்.ஆனால், "தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்திலும், 2-ஜி அலைக்கற்றை இமாலய ஊழல் வழக்கில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்திலும் ஆழ்ந்துள்ளார்.இதனால், "இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்...' என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம்' என்று தமிழ் உணர்வே இல்லாமலும், நழுவலாகவும் பேசியிருக்கிறார்.இதை நினைக்கும்போது, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து அதை கேரள அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி, கடைசியில் அதையும் கைவிட்ட நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது.தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்து கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி. அவரது இந்த நடவடிக்கைகள் "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியையே நினைவுபடுத்துகின்றன.தமிழ் இனத்தின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் தான் தாங்கிப் பிடித்திருக்கும் மத்திய அரசை வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும் இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் நலனுக்காக அவ்வாறு செயல்படாதது அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது.புலி போன்று பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது. இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
source:denamani

No comments:

Post a Comment