Saturday, July 14, 2012

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரனுக்கு, கருணாவிடமிருந்து அழைப்பு


. நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வீ.ருத்ரகுமாரனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு முன்னாள் புலி உறுப்பினரான கருணா அம்மான் எனப்படும் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை ருத்ரகுமாரனும், அவரது ஆதரவாளர்களும் நேரில் கண்டறிந்துகொள்ள வேண்டுமேன முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும்,

தமிழீழ விடுதலைப் புலிகள் புலம்பெயர் தமிழர்களை மூளைச் சலவை செய்துள்ளார்கள். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களை பார்வையிட்டு மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்பதனை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் சமூகத்தை உதாசீனம் செய்யக்கூடாது, ஏனெனில் அவர்கள் அனைவருமே இலங்கையர்கள் என குறிப்பிட்ட அவர், புலம்பெயர் தமிழ் சமூகத்தை புறக்கணித்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களை அழைத்து அவர்களுடன் பேச வேண்டுமென முரளீதரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும் முனைப்புக்களை வெளிவிவகார அமைச்சு எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்த பலர் உண்மை நிலைமையை அறிந்து கொண்டதாகவும், பிரச்சாரங்களுக்கு ஏமாறப் போவதில்லை எனவும் தம்மிடம் குறிப்பிட்டதாகத் தெரிவித்த அவர், புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் சுயநல நோக்கிற்காக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையின் நிலைமையை மோசமாகச் சித்தரிக்க முயற்சிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் காணிகளை இராணுத்தினர் அபகரிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment