வன்னியில் வள்ளிபுனம்
பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான
குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட இந்தச் சம்பவம் இன்று 6 ஆண்டுகள் கடந்து விட்டது.ஈழத்தமிழினத்தை இனவழிப்பு செய்துகொண்டிருக்கும் சிங்கள அரசின் இவ்வாறான கொடூர போர்குற்ற செயல்களை தொடர்ச்சியாக நாம் வெளிக்கொண்டு எமது தமிழீழம் நோக்கிய பாதையில் இப்படியான எம் செஞ்சோலைக் குஞ்சுகளின் நீங்காத நினைவுகளை மீண்டும் மீண்டும் பதிவுசெய்வோம்.
இவ்வாறான, நிகழ்வுகளை தொடர்ந்து செய்வதனால் மாவீரர்களின் தியாகங்களும், மக்களின் அழிவுகளும் மறக்கப்படாது நினைவூட்டப்படுவதோடு, இதன்மூலம் எழுச்சியை தொடர்ந்து எம் மக்கள் மத்தியில் தக்க வைத்து நம்பிக்கையோடு எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும்.
இதுபோன்ற நினைவு நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் பங்குபற்றுவதோடு, அவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து அந்த தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வீண்போகாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 62 செல்வங்களின் நினைவுநாளான இன்று நாம் தலைசாய்த்து அகவணக்கம் செலுத்துவோம்.
அதே நேரம், அங்கு செஞ்சோலையில் எவ்வாறு சிறுவர்கள் பராமரிக்கப்பட்டார்களோ அதே போன்று இன்று அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் முகாம்களிலும், மீள்குடியேற்றப் பகுதிகளிலும் உள்ள சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்வதையே நாம் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
source: sankathinews on August 14th, 2012

No comments:
Post a Comment