ஐ.நா.
மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட ஐ.நா. அதிகாரிகளை இலங்கைக்கு
வருமாறு நாங்களே அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இங்கு வரலாம்.
அபிவிருத்திகளை பார்வையிடலாம். ஆனால் ஆலோசனை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் ௭ன்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்பட ஐ.நா. அதிகாரிகள் இலங்கை வரலாம். வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிடலாம். அவர்களை நாங்களே அழைக்கின்றோம்.
ஆனால் அவர்கள் இங்கு வந்து ஆலோசனைகளை வழங்க முடியாது. அப்படி செய்யுங்கள் இப்படி செய்யுங்கள் என்று கூற முடியாது. அவ்வாறு அவர்கள் கூறினாலும் ஒன்றையும் ஏற்கமாட்டோம். காரணம் அவர்கள் கூறுவதை எம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஏற்கமாட்டோம்.
வடக்கு, கிழக்கில் அரசாங்கம் குறைவாக வேலை செய்கின்றது என்று குற்றச்சாட்டு உள்ளது. எனவேதான் இவ்வாறு அழைப்புக்களை மேற்கொள்கின்றோம். குறிப்பாக பிரிட்டிஷ் எம்.பி.க்கள் குழுவினர் அண்மையில் இலங்கை வந்து யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
அவ்வாறு நாங்கள் தமிழகத்தின் வைகோவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். காரணம் நாங்கள் செய்யும் வேலைத்திட்டங்களை காட்டவேண்டும். இவ்வாறுதான் ஐ.நா. அதிகாரிகளையும் அழைக்கின்றோம். ஆனால் ஆலோசனைகளை ஏற்கமாட்டோம்.
பொதுவாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னர் அதிகரித்த அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை என சர்வதேச மட்டத்தில் தெரிவிக்கப்படுகின்றது. எனவேதான் இவ்வாறு நாடுகளின் பிரதிநிதிகளை அழைக்கின்றோம்.
ஒருமுறை நானும் ஜனாதிபதியும் இந்தியா சென்றிருந்தபோது தமிழக எம்.பி. க்களை இலங்கை வந்து உண்மை நிலையை பார்வையிடுமாறு கோரினோம். அவர்கள் எமது அழைப்பை ஏற்று வருகை தந்தனர்.
இவ்வாறு நாங்கள் செய்யும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை யாரும் வந்து பார்வையிடலாம். எந்தவொரு அறிக்கையையும் விடுக்கலாம். அதனை எம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களின் ஆலோசனைகளை நாங்கள் ஏற்கமாட்டோம். அந்த எமது கொள்கையில் மாற்றம் இருக்காது. அதில் தெளிவாக இருக்கின்றோம். என்றார்
No comments:
Post a Comment