Thursday, September 27, 2012

“பல்கலை விரிவுரையாளர்களின்றி, விடைத்தாள் புள்ளியிடப்பட்டால் தரம் குறைவடையலாம்”

futa(4)பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளவாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின்றி உயர்தர விடைத்தாள் புள்ளியிடும் வேலை அடுத்த வாரம் தொடங்குமாயின் விடைத்தாள் புள்ளியிடுதலின் தரம் குறைவாக இருக்குமென ஆசிரியர் சங்கங்கள் இன்று எச்சரித்துள்ளன.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் தொடரினும் க.பொ.த. உயர்தர விடைத்தாள் புள்ளியிடும் வேலை ஒக்டோபர் முதலாம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார அண்மையில் தெரிவித்திருந்தார்.

வழமையாக க.பொ.த. உயர்தர விடைத்தாள் புள்ளியிடுதலை ஆசிரியர்கள் செய்வர். இதன்போது, குழுக்களின் மேற்பார்வையாளர்களாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடமை புரிவர், இது புள்ளியிடுதலில் உயர்தரம், நம்பிக்கை, நேர்மை என்பவற்றை உறுதி செய்வதற்கான ஏற்பாடாகும்.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் புள்ளியிடுதல் தொடர்பான கூட்டத்திற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் 400 பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அழைத்திருந்த போதிலும் 16 பேர் மட்டும்தான் பங்குபற்றினர். இவர்களில் பெரும்பான்மையானோர் இளைப்பாறியவர்களாவர் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
“அரசாங்கம் உண்மையாகவே உயர்தர விடைத்தாள் புள்ளியிடுதல் தொடர்பாக அக்கறை கொண்டிருக்குமானால் எமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வை வழங்க வேண்டும். அதன் பினன்ரே நாம் வேலைக்கு செல்லக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்த பிரச்சினை குறித்து மேலும் பேசுவதற்குக்கூட எமக்கு நேரம் வழங்கப்படவில்லை” என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

No comments:

Post a Comment