Monday, September 17, 2012

புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: தனியார் பஸ்கள் ஓடவில்லை – கடைகள் அடைப்பு

83c5248b-cc8e-4309-8dad-2c49accc1a85_S_secvpfமத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் பவுத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தமிழக மற்றும் புதுவை அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வர அனுமதிக்க கூடாது எனவும் அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன. ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை நாம் தமிழர் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) இன்று (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு புதுவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.


போராட்டத்தையொட்டி நாம் தமிழர் கட்சியின் வணிகர்கள் சங்கம், பெரியகடை வியாபாரிகள் சங்கம், பஸ், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. போராட்டதால் புதுவையில் தனியார் பஸ்கள் பெரும்பாலானவை ஓடவில்லை.
ஒரு சில தனியார் பஸ்கள் ஓடின. அதே வேளையில் தமிழக அரசு பஸ்களும், புதுவை அரசு பஸ்களும் ஓடின. அரசு பஸ்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்தனர். புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் புதுவை பஸ் நிலையம் வந்து சென்றன. இருப்பினும் புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனால் புதுவை பஸ் நிலையத்திலும், பஸ் நிறுத்தங்களிலும் காலையில் பணிக்கு செல்வோர் கல்லூரி மாணவர்கள் பஸ்சுக்காக காத்து இருந்தனர். ஆட்டோக்கள், டெம்போக்கள் ஒருசில ஓடின. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கின. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
நகரின் முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பெரிய மார்க்கெட் இயங்கவில்லை. இதேபோல் நெல்லித்தோப்பு, சின்ன மணிக்கூண்டு, முத்தியால் பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளும் இயங்க வில்லை.
நகரையொட்டி உள்ள புறநகர் பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படவில்லை. அதேவேளையில் கிராம பகுதியில் கடைகள் திறந்திருந்தன. புதுவை நகரில் உள்ள சினிமா திரையரங்குகளில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், பஞ்சாலைகள் இயங்கின. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் இயங்கின.
தொழிற்பேட்டைகளில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளும் இயங்கின. போராட்டத்தையொட்டி புதுவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், ரெயில் நிலையம் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment