ஐக்கிய
இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக் கூடிய அதிகாரப் பகிர்வுடனான
நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் எட்டப்பட வேண்டும். இதனையே இந்தியா இலங்கை
அரசிடம் எதிர்பார்க்கிறது. அதன் அடிப்படையிலேயே இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்குகிறது.
இவ்வாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் அழுத்தம், திருத்தமாக
எடுத்துரைத்தார் இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங். நேற்று முன்தினம் இரவு
பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர்
மன்மோகன்சிங்கும் சந்தித்துப் பேசினர்.
2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில்
உத்தியோகபூர்வமாக விவரமாக நடைபெற்ற கலந்துரையாடல் இது என புதுடில்லி
வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைத்
தமிழர் இனப்பிரச்சினை விடயத்தில் அதிக அக்கறை காட்டி பேசியிருந்தார்.
இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு பின்தள்ளிப் போவதால் தமிழகத்தில் இலங்கை
அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் எதிரான எதிர்ப்பலைகள் வலுத்து
வருகின்றமையையும் ஜனாதிபதி மஹிந்தவிடம் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய
நிரந்தர அரசியில் தீர்வு ஒன்றை இலங்கை அரசு விரைவில் வழங்க வேண்டும்.
அதனையே இந்தியா இப்போது இலங்கையிடம் எதிர்பார்க்கிறது எனவும் மன்மோகன்
குறிப்பிட்டார்.
தமிழர் விடயம் தொடர்பில் கலந்துரையாடிய போது மூன்று மாகாணங்களில்
தேர்தல்கள் நடத்தியமை, அடுத்த வருடம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை
நடத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நிர்வாக மற்றும் ஏனைய விடயங்கள்
தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமருக்கு விளக்கினார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமை குறித்தும் ஜனாதிபதி மஹிந்த
தனது அதிருப்தியை வெளியிட்டார். இருப்பினும் இந்தியாவுடனான உறவைத் தனது
அரசு ஒருபோதும் கைவிடப் போவதில்லை எனவும் அவர் இந்தச் சந்திப்பில்
உறுதியளித்தார்.
கடல் எல்லையை மீனவர்கள் கடக்கும் பட்சத்தில் அவர்களை
மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பின்
போது வலியுறுத்தினார். வர்த்தக உறவு மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி
தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதாக புதுடில்லி
வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment