சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் 2008ம் ஆண்டு வெற்றிபெற்றிருந்த கொசோவா, அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, கடந்த 10ம் திகதி திங்கட்கிழமை சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து விடுதலை பெற்று பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்துள்ளது. கொசோவோவின் மலர்வை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தொடக்கம் உலகின் பல நாடுகளும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளன.
இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படக்கூடாது என்று குரல் கொடுக்கும் இந்தியாவும் கொசோவோவின் விடுதலையை வரவேற்றதுதான் ஆச்சரியத்திற்குரிய விடயம். ‘கொசோவா தனிநாடாக மலர்ந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்தியுள்ளார். ‘சரியான பாதையில் சென்று கொசோவா தனது இலக்கைத் தொட்டுவிட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயம்’ என்றும் அவர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
கொசோவோவின் விடுதலையை அங்கீகரிக்கும், வரவேற்கும் இந்த உலகம் தமிழீழ தேசத்தின் விடுதலையை மட்டும் மறுப்பதும், தடுப்பதும் ஏன்? தனிநாடாக மலர்ந்துள்ள கொசோவிற்கும் தமிழீழத்திற்கும் பிரிந்துசெல்வதற்கான உரிமைகளும், காரணங்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. இரண்டு தேசங்களாக இருந்த இலங்கைத் தீவை தமது நிர்வாக வசதிக்காக ஒரே தேசமாக்கிய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள், 1948ம் ஆண்டு இலங்கைத் தீவை விட்டு வெளியேறியபோது அதனை ஒற்றைத் தேசமாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
ஜேர்மனிய கிட்லரின் நாசிப் படைகளை எதிர்ப்பதற்காக ஒன்று சேர்ந்திருந்த ஆறு தேசிய இனங்களைக் கொண்டு, இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததன் பின்னரான 1946ம் ஆண்டில் யூகோசுலேவியா குடியரசை மார்சல் டிட்டோ உருவாக்கினார். ஆனால், ஒன்று சேர்ந்த யூகோசிலாவியக் குடியரசில் ஒவ்வொரு இனத்திற்கும் சமமான நீதியும், உரிமையும் கிடைத்திருக்கவேண்டும். அது கிடைக்காதபோது முரண்பாடே மூண்டது. ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்றன. முடிவு போராக விஸ்வரூபம் எடுத்தது. போரின் விளைவாக 1991 இல் சுலோவேனியா, மசிடோனியா, குரோசியா ஆகிய மூன்று தேசிய இனங்கள் யூகோசிலாவியக் குடியரசிலிருந்து பிரிந்து தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக் கொண்டன.
1992ம் ஆண்டு பொஸ்னியாவும் தனியாகப் பிரிந்தது. சேர்பியாவும், மோன்டினிகுரோவும் மட்டுமே யூகோசிலாவிய குடியரசில் எஞ்சியிருந்தன. இந்நிலையில்தான் சேர்பியாவிற்குள் ஏற்கனவே ஒன்றிணைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த கொசோவோ அல்பேனிய மக்கள் தங்கள் விடுதலைக்காக போராடத் தொடங்கினார்கள். 1913ம் ஆண்டில் அல்பேனிய மக்களைப் பெரும்பாலும் கொண்ட கொசோவா சேர்பியாவுடன் இணைக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒன்றிணைய முடியாத வேறுபாடுகள் போன்றே, சேர்பியர்களுக்கும் அல்பேனியர்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன.
சேர்பியர்கள் சேர்பியன் மொழியைப் பேசும் தனித் தேசிய இனம். மதத்தால் கிறித்துவர்கள். கொசோவோவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முஸ்லிம்கள். எனவே, சேர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன. சேர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைந்த ஒரு மாநிலமாக கொசோவா விளங்கியபோதும், சேர்பிய அரசு அந்தத் தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்து அந்த மக்களை அடக்கி ஒடுக்கியது.
தங்கள் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து கொசோவோ மக்கள் போராடினார்கள். சிறீலங்கா அரசைப் போன்றே சேர்பிய இராணுவம் கொசோவோ மக்களைத் திட்டமிட்ட இனப்படு கொலைக்கு உள்ளாக்கியது. சிங்கள ஆட்சியாளர்களைப் போன்று அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்தார்கள். சுமார் 10 ஆயிரம் வரையான கோசோவோ அல்பேனிய மக்கள் சேர்பியப் படையினரால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். 1999ம் ஆண்டு இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் நேரில் தலையிட்டன. கெசோவா ஐ.நா.வின் பாதுகாப்பின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
கொசோவோ தங்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டு, சேர்பிய அரசுநிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. சேர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மிலோசேவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இராணுவத் தளபதிகள் சிலரும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சேர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. தமிழீழ விடுதலைப் போரட்டத்தை ஏற்றுக்கொள்ள சிறீலங்காவும் அது சார்ந்த நாடுகளும் மறுப்பது போலவே, கொசோவாவின் விடுதலைப் பிரகடனத்தை ஏற்க முடியாதது என சேர்பியாவும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கிவரும் சில நாடுகளும் குரலெழுப்பின. எனினும், நான்கு ஆண்டுகள் ஐ.நாவின் கண்காணிப்பின் தனது ஆட்சியை அமைதியான முறையில் வெற்றிகரமாக நடத்தியதால் தற்போது ஐ.நாவின் கண்காணிப்பின்றி தமது நாட்டைத் தாமே ஆளும் உரிமையை கொசோவோ மக்கள் பெற்றிருக்கின்றார்கள். சுமார் நூற்றாண்டு அடக்குமுறைக்குள் இருந்து விடுபட்டு தனித் தேசமாக மலர்ந்துள்ளது கொசோவோ.
கொசோவோவைப் போன்றே தமிழர் தேசமும் கடந்த பல தசாப்தங்களாக அந்நியர்களின் ஆட்சியின் கீழ் அடக்கு
முறைக்குள் இருந்து வருகின்றது. கொசோவா விடுதலைக்காகப் போராடியது போலவே தமிழ் மக்களும் தங்கள் தேசிய இனம் என்று தன்னாட்சி உரிமையை பெற்றுவிடுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராட்டங்கள் மூலமாகவும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் மூலமாகவும் முயன்றுவந்திருக்கின்றார்கள். எனவே, கொசோவோவை அங்கீகரிக்கின்ற எந்தவொரு நாடும் தமிழீழத்தின் விடுதலையைப் புறக்கணிக்கவோ, மறுத்துவிடவோ முடியாது.
முறைக்குள் இருந்து வருகின்றது. கொசோவா விடுதலைக்காகப் போராடியது போலவே தமிழ் மக்களும் தங்கள் தேசிய இனம் என்று தன்னாட்சி உரிமையை பெற்றுவிடுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் போராட்டங்கள் மூலமாகவும், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் மூலமாகவும் முயன்றுவந்திருக்கின்றார்கள். எனவே, கொசோவோவை அங்கீகரிக்கின்ற எந்தவொரு நாடும் தமிழீழத்தின் விடுதலையைப் புறக்கணிக்கவோ, மறுத்துவிடவோ முடியாது.
ஆனாலும், கொசோவோ மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காக நேரடியாகத் தலையிட்ட ஐ.நா. தமிழ் மக்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டது. சுமார் 10 ஆயிரம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு இனப்படுகொலைக்காகவே சேர்பியா என்ற தேசத்தில் இருந்து கொசோவோ என்ற தேசம் பிரிந்து செல்ல முடியுமென்றால், இலட்சக் கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தீவில் இருந்து, தமிழீழம் என்ற தேசம் பிரிந்து செல்வதைத் தடுக்க இந்த உலகத்திடம் தர்க்க ரீதியான காரணங்கள் எவையுமில்லை. இந்த நூலைப் பிடித்துக்கொண்டே தமிழ் மக்கள் தங்களது சுதந்திர தேசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு
நன்றி : ஈழமுரசு
No comments:
Post a Comment