2006ஆம்
ஆண்டு திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவர் மற்றும் மூதூரில்
தொண்டு நிறுவன பணியாளர்கள் 17பேரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள்
இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம்
தெரிவித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன இந்த வழக்குகளை மீளவும் ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தன.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டது.
இது தொடர்பில் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ கூறுகையில், ‘சட்டமா அதிபர் திணைக்களம், மேற்படி வழக்குகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரும்’ என்றார்.
இதேவேளை, இந்த வழக்குகளுக்குப் பொறுப்பான மேலதிக சொலிஷ்டர் ஜெனரல் சுஹத கம்லத் கூறுகையில், ‘இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான ஆதாரங்களை தனித்தனியாக ஆராய்ந்து வருவதாகவும் இந்த சம்பவங்களோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாகவும்’ கூறினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், பிரான்ஸ் நாட்டின் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த 17 பணியாளர்கள் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அந்த சம்பவங்களை ஆராய்ந்த மேற்படி குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment