Wednesday, October 10, 2012

நோர்வேயின் மனிதாபிமானமற்ற செயற்பாடு குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவை : உண்ணாவிரதிகள் கோரிக்கை

Nor-fas-tஒஸ்லோவில் இடம்பெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளாகவும் நீடித்திருக்கின்ற நிலைமை தொடர்பில் நோர்வேயின் சிறுவர் விவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இது வரையில் அமைச்சோ அல்லது நோர்வே அரசோ அலட்சியப்போக்கினையே கடைப்பிடித்து வருவதாக உண்ணாவிரதப் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ரஜித்தா ஆனந்ததராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை பரிசோதனைக்குட்படுத்திய வைத்திய அதிகாரிகள் அவர்களது உடல்நிலை மோசமடைந்து வருவதாக அறிவித்துள்ளனர்.

மேற்படி சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்துவரும் இலங்கைத் தாய்மார் தொடர்பான செய்திகள் நோர்வே ஊடகங்களில் வெளிவராத வண்ணம் நோர்வே அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நோர்வே அரசாங்கம் மற்றும் அங்குள்ள சிறுவர் விவகார அமைச்சு ஆகிய தரப்புகள் இவ்விடயம் தொடர்பில் அறிந்திருக்கின்ற போதிலும் இது வரையில் எந்தவொரு பதிலும் தராதிருப்பதாக தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் நோர்வே அரசு திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் நோர்வே அரசாங்கத்திடமிருந்து தமது பிள்ளைகள் தொடர்பில் சாதகமான பதில் ஒன்று கிடைக்கும் வரையில் டொம் தேவாலயத்தைவிட்டு நகரப்போவதில்லையென்றும் நோர்வே அரசின் பிடிவாத குணத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் டொம் தேவாலயத்திற்குள்ளேயே தமது உயிரை விடுவதற்கும் துணிந்திருப்பதாக மேற்படி இருதாய்மாரும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
நோர்வே அரசாங்கத்தின் பொய்த்தகவல்கள், நேர்மையற்ற நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு மையம் ஆகியன கவனம் செலுத்த வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராளிகளான தாய்மார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment